vijayakanth advice to rajini about politics
கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன் என ரஜினிகாந்த் கூறியுள்ள நிலையில், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், எதிர்ப்பு இருந்தால் தான் அரசியல் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் மாவட்ட வாரியாக புகைப்படம் எடுத்தார்.
5 நாட்களாக நடைபெற்ற இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டு ரஜினியுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.
இந்த சந்திப்பின்போது அரசியலில் குதிப்பதை தீர்மானித்தது போல் நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பாக பேசினார். இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து வரவேற்பும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளன.

ரஜினிகாந்தின் முடிவு குறித்து பொதுமக்கள் எதிர்ப்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், நெல்லையில் தே.மு.தி.க பிரமுகர் இல்ல திருமணவிழாவிற்கு விஜயகாந்த் அவரது மனைவி பிரேமலதாவுடன் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த விஜயகாந்த் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னரே பொதுத்தேர்தல் வரும் எனவும் உள்ளாட்சி தேர்தல் வராமலே கூட போகும் என தெரிவித்தார்.
ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய விஜயகாந்த், ரஜினி என்னுடைய நல்ல நண்பர், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். எதிர்ப்பு இருந்தால் தான் அரசியல். நான் அரசியலுக்கு வந்தபோதும் எதிர்ப்பு இருந்தது. ரஜினி அரசியலுக்கு வருவதால் தேமுதிகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என கூறினார்.
