திமுக தலைவர் கருணாநிதி, ஆக்டிவ்-ஆக இருந்திருந்தால், தமிழ்நாட்டின் அரசியலே வேறாக இருந்திருக்கும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனியார் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். பேட்டியின்போது, எதிர்கட்சியான திமுகவின் செயல்பாடு எப்படி உள்ளது என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த விஜயகாந்த், இந்த அதிமுக அரசு தானாகவே கவிழும். தங்கள் பதவியை தக்க வைத்துக்கொள்ளும் ஒரே நோக்கத்தோடு, ஆட்சியாளர்கள் உள்ளார்கள். அதனால் சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலைக்கு சென்று விட்டது.

எதிர்கட்சியான திமுக 89 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ளது. அதன் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களையும் சேர்த்தால் சுமார் 100 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். ஆனால், இவ்வளவு பலத்தை வைத்துக் கொண்டு திமுக எதையும் செய்ய முடியாத நிலையில் உள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் சரியில்லாததால் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். திமுகவின் பின்னடைவுக்கு அவரின் ஓய்வும் ஒரு காரணம்.

இத்தனை வலுவான எதிர்க்கட்சியாக சட்டமன்றத்தில் திமுக இருக்கும் இந்த நிலையில், கருணாநிதி ஆக்டிவ்-ஆக இருந்திருந்தால் நிச்சயம் ஏதேனும் ஒன்றை நடத்திக் காட்டியிருப்பார்.

இப்போது திமுகவின் செயல் தலைவராக இருக்கும் ஸ்டாலின், செயல்படாத தலைவராகவே இருக்கிறார். தினமும், எங்கேயாவது சென்று கொண்டிருக்கிறார். 

தன்னைச் சுற்றி கூட்டம் இருக்க வேண்டும் என்பதிலேயே அவர் குறியாக இருக்கிறார். ஸ்டாலின் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும், கூட்டமெல்லாம் இங்கே வருகிறது. ஆனால் ஓட்டுகள் எல்லாம் எம்.ஜி.ஆருக்குப் போகிறது என்று ஒரு காலத்தில் கருணாநிதி சொன்னதை ஸ்டாலினுக்கு நினைவுபடுத்துகிறேன்.

இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.