மதுரையில் தேமுதிக நிர்வாகி இல்லத் திருமண விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திமுக, அதிமுகவுக்கு மாற்று தேமுதிக என்றே பார்க்கப்பட்டது. ஆனால், சூழல் காரணமாக தேமுதிகவுக்கு கூட்டணி வைக்கவேண்டிய தேவை ஏற்பட்டது. காலத்தின் சூழலில் தேமுதிக எப்படி பலம் பெறுமோ அதற்கேற்ப நாங்கள் பயணிப்போம்.


தமிழகத்தில் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் இல்லாமல் நடக்கும் முதல் சட்டப்பேரவைத் தேர்தல் இது. அதனால், அனைவருக்குமே இது முதல் தேர்தல் மாதிரிதான். எல்லாருக்குமே புதிய அனுபவமாக இருக்கலாம். அதனால் நான் பெரியவன், நீ பெரியவன் என்றெல்லாம் யாரும் பேச முடியாது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக தலைமையில் மூன்றாவது அணி அமையவும் வாய்ப்பு உள்ளது” என்று விஜய பிரபாகரன் தெரிவித்தார்.
அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை ஏற்காமல் முன்னுக்கு பின்னாகப் பேசிவருகிறது. இன்னொரு கட்சியான பாமக அதிமுக ஆட்சியிடம் எதைச் சொன்னாலும் செய்யாமல் இருக்கிறது. வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு என பாதையை மாற்றி பயணிக்கும் சூழலில் சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில் தேமுதிக தலைமையில் மூன்றாவது அணி என்று விஜயகாந்த் மகன் பேசியிருப்பதன் மூலம் அதிமுக கூட்டணி கிறுகிறுத்துகிடக்கிறது.