சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில், புகைப்படத்தில் `நாளைய முதலமைச்சரே' என்று மார்ஃபிங் செய்து வெளியிட்டதாக அமமுக தொழில்நுட்ப பிரிவுச் செயலாளர் முத்துக்குமாரை அதிகாலையில் போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டையில் கொரோனா ஊரடங்கை ஒட்டி நிவாரணப் பொருட்களை கொடுத்தார். அப்போது அவர் அளித்த பொன்னி அரிசிப் பையில், விஜயபாஸ்கர் என்ற பெயருக்கு மேலே நாளைய முதல்வர் என்ற வார்த்தைகளும் இடம்பெற்றிருப்பதாக ஒரு படம் ஃபேஸ்புக், வாட்ஸ் அப்புகளில் வைரலானது. விஜயபாஸ்கர் என்ற பெயருக்குக் கீழ் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் என்ற எழுத்துகள் இடம்பெற்றிருந்தபோதும், பெயருக்கு மேல் நாளைய முதல்வர் என்ற பட்டம் இடம்பெற்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் இடையே இணக்கமான உறவு இல்லை என்று ஏற்கனவே அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்ட நிலையில் இந்த படம் அந்த யூகங்களை மேலும் வலுவாக்குவது போல இருந்தது. ஆனால் அதிமுக தரப்பில் இதை மறுத்த விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் அமைச்சர் கொடுத்த அரிசிப் பைகளில் நாளைய முதல்வர் என்று எழுதப்படவில்லை, அது சிலரது போட்டோ ஷாப் வேலை என்று ஃபேஸ்புக்கிலேயே ஒரிஜினல் படத்தையும் வெளியிட்டனர்.

இந்நிலையில், விஜயபாஸ்கரின் ஐடி விங் டீமைச் சேர்ந்த குணசீலன் என்பவர் புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் மே 5ம் தேதி ஒரு புகார் கொடுத்திருக்கிறார். அந்தப் புகாரில், அமைச்சர் விஜயபாஸ்கர் சார்பாக கொடுக்கப்பட்ட அரிசிப் பைகளில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் என்று அச்சடிக்கப்பட்டிருந்தது. அதை யாரோ நாளைய முதல்வர் என்ற வாசகங்களை சேர்த்து திரித்து வாட்சப்பில் வெளியிட்டிருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அந்தப் புகாரில் கூறியிருக்கிறார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், புகைப்படத்தில் `நாளைய முதலமைச்சரே' என்று மார்ஃபிங் செய்து வெளியிட்டதாக அமமுக தொழில்நுட்பப்பிரிவு செயலாளர் முத்துக்குமார் என்பவரைப் புதுக்கோட்டை காவல்துறையினர் விழுப்புரத்துக்குச் சென்று அதிகாலை கைது செய்தனர். மேலும், தகவல் தொழில் நுட்பச் சட்டத்தின் கீழ் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, அமமுக பிரமுகர் முத்துக்குமாரின் கைது நடவடிக்கைக்கு அமமுக பொதுச்செயலாளர் தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.