பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து தமிழக அரசு சார்பில் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதால் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கிடைக்கும் என அமைச்சர் விஜய பாஸ்கர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜய பாஸ்கர், நீட் தேர்வில இருந்து விலக்கு அளிக்குமாறு அனுப்பப்பட்டுள்ள மனுவில் இன்றும் சில கூடுதல் விவரங்களை மத்திய அரசு கேட்டுள்ளதாகவும், அதனை தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் டெல்லிக்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும் கூறினார்.

நீட் தேர்வை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், தமிழகம் மட்டுமே அதனை எதிர்த்து போராடி வருவதாக தெரிவித்தார்.மற்ற மாநிலங்களை விட தமிழக அரசு தான் மத்திய அரசுக்கு அதிக அழுத்தம் கொடுத்து வருகிறது.

இப்பிரச்சனையை அனைத்து மாணவர்களின் உணர்வுகளை தமிழ அரசு புரிந்து கொண்டுள்ளதாகவும், இதே போன்று பெற்றோர்களும் சற்று பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்தார்.

இப்பிரச்சனையில் விரைவில் ஒரு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்றும் அமைச்சர் விஜய பாஸ்கர் உறுதிபடத் தெரிவித்தார்.

அதே நேரத்தில்  நீட் தேர்வில் இருந்து விலக்குபெற மாநில அதிகாரத்தைப் பயன்படுத்த முடியுமா?, அதற்கேற்ற அவசர சட்டத்தை கொண்டுவர முடியுமா? என சட்ட வல்லுநர்களுடன் தமிழக அரசு ஆலாசித்து வருவதாகவும் அமைச்சர் கூறினார்.