vijayabaskar friend suicide full report
அதிமுகவின் அரசு ஒப்பந்தகாரர் சுப்பிரமணியன் எலி மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் பின்னணி குறித்த முழுவிபரங்களும் இதோ படியுங்கள்…
அதிமுக அம்மா அணியின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் குவாரிகள் உட்பட 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த மாதம் சோதனை நடத்தினர். அப்போது நாமக்கல் டீச்சர் காலணியில் வசிக்கும் அவரது நண்பரும் அரசு ஒப்பந்தகாரருமான சுப்பிரமணியன் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது முக்கிய ஆவணங்கள் சிக்கியது. ஆவணங்கள் தொடர்பாக பலமுறை வருமான வரித்துறையினர், சுப்பிரமணியிடம் விசாரணையும் நடத்தினர்.
சுப்பிரமணியும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் பல வருடங்களாக நெருங்கிய நண்பர்கள் ஆவர். அதிமுக ஆட்சிக்கு வந்த போது தான் சுப்பிரமணிக்கு அரசு மருத்துவமனைக்கான காண்ட்ராக்டுக்களை விஜயபாஸ்கர் கொடுத்துள்ளார்.
.jpg)
இந்த நிலையில் இன்று நாமக்கல் மோகனூர் செவுட்டு நாயக்கன்பட்டியில் சுப்பிரமணிக்கு சொந்தமாக 10 ஏக்கர் தோட்டமும் அதில் பண்னை வீடும் உள்ளது. தினமும் காலையில் தனது தோட்டத்திற்கு அவர் கார் ஓட்டுனருடன் சென்று வருவது வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.
நேற்று மாலை நாமக்கல் மாவட்டத்தில் கனமழை பெய்ததால் இன்று காலை அவர் தனது ஓட்டுனரை தன் வீட்டிலேயே விட்டு விட்டு தானே காரை ஓட்டிக்கொண்டு தோட்டத்திற்கு சென்றுள்ளார்.

தோட்டத்தில் வேலை செய்யும் பணியாளர்களிடம் சற்று நேரம் ஓய்வு எடுப்பதாக கூறிவிட்டு வீட்டில் உள்ள கட்டிலில் படுத்துள்ளார். அப்போது அவரது சூப்பரவைசர் வடிவேல், ஏதோ பேசுவதற்காக சுப்பிரமணியை எழுப்பிய போது அவர் மயக்க நிலையில் இருந்துள்ளார்.

உடனே பக்கத்து தோட்டத்தில் உள்ளவரை சூப்பரவைசர் வடிவேலு அழைத்து, காரில் சுப்பிரமணியை ஏற்றிக்கொண்டு நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் 15 நிமிடத்திற்கு முன்னதாவே அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இதையடுத்து நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அவரது உடல் பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

சுப்பிரமணியின் மரணம் குறித்து பண்ணை வீட்டில் வேலைசெய்யும் பாப்பம்மாளிடம் நாம் கேட்ட போது…
நேற்று முன்தினம் தான் ஐயா சென்னைக்கு சென்று வந்தார். எப்போதுமே பேப்பரில் எழுதாத அவர், நேற்று காலை பல பேப்பர்களில் எழுதிக்கொண்டே இருந்தார். அப்போது என்னிடம் டீ போட கூறினார். நானும் போட்டுக் கொடுத்தேன். நீண்ட நேரம் எழுதி முடித்த பின் அந்த பேப்பர்களை எடுத்துக்கொண்டு காரில் வீட்டுக்கு சென்று விட்டார்.
அவர் சென்னை சென்று வந்ததில் இருந்தே அவரது முகம் வாடியே இருந்தது. நான் கூட ஏங்க அய்யா முகம் வாடி உள்ளது என்று கேட்ட போது ஒன்றும் இல்லை பாப்பம்மா என்றார். இன்று காலை நான் தோட்ட வேலையை செய்து கொண்டு இருந்தேன்.
ஐயா வந்தார்.. எனக்கு கலைப்பாக இருக்கிறது என்று கூறிவிட்டு கட்டிலில் சற்று நேரம் தூங்க உள்ளதாக அவர் கூறினார். நானும் ஐயா தூங்கத்தான் சென்றுள்ளார் என்று எனது வேலையை கவனித்தேன். ஆனால் சிறிது நேரத்தில் இப்படி நடந்து விட்டது என்று கண்ணீர் மல்க கூறினார்.
சுப்பிரமணி இறந்து கிடந்த கட்டிலின் அருகில் விஷமருந்து பாட்டில்கள் ஏதும் இல்லை. அதேபோல் எந்தவித வாடையும் இல்லை. உண்மையில் அவர் விஷம் குடித்து தான் இறந்துள்ளாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று மோகனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுப்பிரமணியின் தோட்டத்தில் பீகாரை சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் சுற்று சுவர் எழுப்பும் பணியில் ஒரு வார காலமாக பணியாற்றி வருகின்றனர். அவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் சுப்பிரமணியின் இறப்பு குறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர். அதில் இயற்கைக்கு மாறான உயிரிழப்பு என்றுதான் குறிப்பிட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் தான் அவரது மரணம் குறித்த உண்மை நிலை தெரியவரும்.

மேலும் சென்னையில் அதிமுக முக்கிய புள்ளிகளை கடந்த இரு தினங்களுக்கு முன் சுப்பிரமணி சந்தித்துள்ளதாகவும் அவர்கள் ஏதேனும் நெருக்கடி கொடுத்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
சுப்பிரமணிக்கு சாந்தி என்ற மனைவியும் சதிஷ் என்ற மகனும் அபிராமி என்ற மகளும் உள்ளனர். அபிராமிக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் திருமணம் நடைபெற்றது. அவரது திருமணத்தில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
