தமிழக அமைச்சரவையில் இருந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதவிவிலகுவார் அல்லது டிஸ்மிஸ் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் கடந்த 7-ம் தேதி வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக, 89 கோடி ரூபாய் பணம் யார் யாரிடம் வழங்கப்பட்டுள்ளது என்பதற்கான ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆர்.கே நகர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக, அமைச்சர்களுக்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டது என்பன குறித்த தகவல்கள் அந்த ஆவணங்களில் இடம்பெற்றிருந்தன. இதுதொடர்பாக, விஜயபாஸ்கரை நேரில் அழைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் ஏற்கெனவே விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து அவர் ராஜினாமா செய்வார்? அல்லது முதலமைச்சர் அவரை பதவி நீக்கம் செய்வார் என தகவல்கள் வெளியானது.

இந்நிலையில்  அமைச்சர் விஜய பாஸ்கர் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினார்.

இதனைத் தொடர்ந்து தமிழக சட்டப் பேரவைச் செயலாளர் ஜமாலுதீனைச் சந்தித்து பேசினார். சுமார் 20 நிமிடங்கள் சந்திப்புக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய விஜய பாஸ்கர், நீட் தேர்வு எழுதுவதில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது மற்றும் பொது மருத்துவ இட ஒதுக்கீடு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து முதலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடமும் பின்னர் ஜமாலுதீனிடமும் பேசியதாக தெரிவித்தார்.

ஆனால் விஜய பாஸ்கர் பதவி விலகாவிட்டால் டிஸ்மிஸ் செய்யப்படுவார் என ஆளுநர் எச்சரித்தால் இது தொடர்பாகத்தான் முதலமைச்சர் மற்றும் சட்டப் பேரவை செயலாளரை சந்தித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் விஜய பாஸ்கரை பதவி விலகச் சொன்னதாக தெரிகிறது. எனவே அமைச்சர் விஜய பாஸ்கர் இன்று ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.