vijayabaskar complains central govt

நீட் தேர்வு விவகாரத்தில் மாநிலத்தின் கோரிக்கையை குடியரசுத்தலைவரிடம் மத்திய அரசு அளிக்கவில்லை எனவும் கல்வியை மாநில அரசின் உரிமையில் இருந்து மத்திய அரசு நீக்கிவிட்டது எனவும், சட்டபேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் கவர்னர் உரையுடன் தமிழக சட்டமன்றம் கூடியது. பின்னர், கடந்த மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்த விவாதம் நடைபெறவில்லை. இதனால், எதிர்க்கட்சியினர் பட்ஜெட் குறித் விவாதங்கள் நடத்த வேண்டும் என வலியுறுத்தி வந்தன.

கடந்த சில நாட்களுக்கு முன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஜூன் 14ம் தேதி சட்டமன்றத்தில் பட்ஜெட் குறித்த விவாதம் நடைபெறும் என அறிவித்தார்.

அதன்படி நேற்று சபாநாயகர் தனபால் தலைமையில் சட்டமன்றம் கூடியது. அப்போது திமுகவினர் அதிமுக எம்.எல்.ஏ சரவணன் பேசிய சர்ச்சை வீடியோ குறித்து கேள்வி எழுப்பினர்.

அதைப்பற்றி பேச தனபால் மறுப்பு தெரிவித்ததால் அமளியில் ஈடுபட்ட திமுகவினர் அவையில் இருந்து வெளியேற்றபட்டனர்.

இதையடுத்து இன்று கூட்டப்பட்ட சட்டப்பேரவையில் நீட் தேர்வு குறித்து திமுக எம்.எல்.ஏ தங்கம் தென்னரசு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக அரசு நீட் தேர்வு குறித்து நிறைவேற்றிய 2 தீர்மானங்களை மத்திய அரசுக்கு அனுப்பியதாகவும், நீட் தேர்வு விவகாரத்தில் மாநிலத்தின் கோரிக்கையை குடியரசுத்தலைவரிடம் மத்திய அரசு அளிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும், நீட் தேர்வு வேண்டாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு எனவும், மாநில அரசின் உரிமையிலிருந்த கல்வியை மத்திய அரசு எடுத்துவிட்டது எனவும் தெரிவித்தார்.

கிராமப்புற மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு கொண்டுவருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வுக்கான முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில் அதற்கான விண்ணப்பங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன எனவும் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.