vijayabaskar about neet reservation cancelled by HC

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என்றும், அது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தேசிய அளவிலான தகுதி தேர்வை நடத்தி, அதில் கிடைக்கும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என மத்திய அரசு கூறியது.

இந்த நிலையில், மாநில பாடத்திட்டத்தின்படி படித்த மாணவர்களுக்கு 85 சதவீத இட ஒதுக்கீடு செய்யும் வகையில் ஒரு அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. மீதமிருக்கும் 15 சதவீத இடங்கள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்கீழ் படித்த மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று அந்த அரசாணையில் கூறப்பட்டிருந்தது.

தமிழக அரசின் இந்த அரசாணையை எதிர்த்து சிபிஎஸ்இ மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கடந்த 14 ஆம் தேதி தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, சென்னை, உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது.

இந்த மனு மீதான விசாரணையின்போது, நீதிபதி ரவிச்சந்திர பாபு வழங்கிய தீர்ப்பினை உறுதி செய்தும், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டது. மேலும், அரசாணை ரத்து செய்யப்பட்டது சரியே என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

இது தொடர்பாக நேற்று சுகாதார துறை அமைச்சர், செயலாளர், மக்களவை துணை சபாநாயகர் ஆகியோர், மத்திய சுகாதார துறை அமைச்சரை சந்தித்து நீட் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தினர்.

இந்த நிலையில், நீட் தேர்வு விவகாரத்தில் சட்ட சிக்கல்களை களைவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

85 சதவீத ஒதுக்கீடு தொடர்பான தமிழக அரசாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என்றும், இது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.