விஜயகாந்துக்கு எதிரி வேறு எங்கும் இல்லை, சொந்த வீட்டுக்குள்ளேயே சொந்த ரத்தத்திலேயே இருக்கிறார் போல. பின்ன?....அ.தி.மு.க - பி.ஜே.பி. கூட்டணி பேருந்தின் கடைசி சீட்டில் துண்டு போட்டு ஏற தவமிருந்து கொண்டிருக்கிறார்கள் பிரேமலதாவும்,  சுதீஷும். இது க்ளிக் ஆகி ஏதோ ரெண்டு தொகுதிகளை ஜெயிச்சு, எம்.பி.க்கள் உருவானால்தான் கட்சியை காப்பாற்ற முடியும் என்பது விஜயகாந்துக்கும் புரிந்துள்ளதால் அவரும் அன்று அ.தி.மு.க.வுக்கு எதிராக துருத்திய நாக்கை இன்று மடித்து வைத்துவிட்டு மடங்கியிருக்கிறார். 

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கும் விஜயகாந்தின் மகன் பிரபாகரனோ தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இரண்டு கட்சிகளையும் போட்டு வெளுத்தெடுத்திருக்கிறார். அதிலும், ஆளுங்கட்சிக்கு எதிராக அவர் காட்டியிருக்கும் ஆவேசம்தான் கூட்டணிக்கு வாய்ப்பே இல்லாமல் பண்ணி விடுமோ என்று பதறவிட்டிருக்கிறது தே.மு.தி.க. நிர்வாகிகளை. 

அ.தி.மு..க.வுக்கு எதிராக அப்படி என்ன சொல்லியிருக்கிறார் பிரபாகரன் தெரியுமா?...

* உடம்பு சரியில்லாமல் இருக்கிற எங்க அப்பா நூறு ஜெயலலிதாவுக்கு சமம். நூறு கலைஞருக்கு சமம். ஆயிரம் ஸ்டாலினுக்கு சமம். 

* 2016 தேர்தலில் என்னமோ வாய்ப்பை விட்டுட்டாருன்னு சொல்றீங்க, காசு வாங்கிட்டு கூட்டணி வைக்கிறதெல்லாம் ஒரு வாய்ப்பா? அதேவேளையில 2011ல் அ.தி.மு.க. கூட கூட்டணி வெச்சதும் தப்பு.

* நூற்று இருபது சீட் வெச்சிருந்தாலும் அ.தி.மு.க. ராஜா இல்லை...அது என்னான்னு என் வாயால சொல்லமாட்டேன். 

* அ.தி.மு.க.வை வலுவான கட்சின்னு சொல்றாங்க, நிச்சயமா இல்லை. 

* ஜெயலலிதா கூட கூட்டணியில் இருந்தப்பவே அந்தம்மாவோட தவறுகளை தட்டிக் கேட்டவர் எங்க அப்பா, அந்த கூட்டணியில் இருந்ததால மடங்கிப் போகலை, ‘போங்கடா டேய்!’ன்னு சொன்னாரு. 

* தே.மு.தி.க. எந்த அணியில் இருக்குதோ அந்த அணிதான் ஜெயிக்கும். இது தெரிஞ்சதாலேதான் எல்லாரும் எங்க கூட கூட்டணிக்காக காலா விழுறாங்க. ...இப்படியாக பொளந்திருக்கிறார். பிரபாகரனின் இந்த பொளேர் பேச்சுக்கள் அப்படியே உளவுத்துறையின் வழியாக முதல்வரின் கவனத்துக்கு போயிருக்கிறது. அவர் யோசிக்க, அமைச்சர்  ஜெயக்குமாரோ கொந்தளித்துவிட்டாராம். 

‘அண்ணே இவங்களை இப்படியே விட்டு வெச்சா ரொம்ப ஓவரா போயிடுவாங்க. கூட்டணிக்குள்ளே வந்த பிறகும் பேச்சு சரியா இருக்காது. அதனால இவங்க விஷயத்துல யோசிச்சு முடிவெடுங்க.” என்று அழுத்தமாக சொல்லியிருக்கிறார். விபரம் தே.மு.தி.க.வினரின் காதுகளை வந்தடைய ‘அய்யோ இந்த எலெக்‌ஷனும் போச்சா?’ என்று கதறிவிட்டார்களாம். பாவம்யா கேப்டன்!