தேமுதிகவுக்கு புது ரத்தம் பாய்ச்சுவதில் படுவேகம் காட்டி வருகிறார் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன். 

கருப்பு சிங்கமாய் கர்ஜித்து வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட, தேய்பிறையானது அக்கட்சியின் நிலை. பல நிட்வாகிகள் மாற்று முகாம்களுக்கு தாவ, தேமுதிகவின் எதிர்காலம் அவ்வளவு தானா? என பதறினர் அக்கட்சியின் தொண்டர்கள். இந்நிலையில், தனது மனைவி பிரேமலதாவுக்கு பொருளாளர் பதவி கொடுத்து, மகன் விஜய பிரபாகரனுக்கும் கட்சி பொறுப்பு தந்து விட்டார் விஜயகாந்த்.

சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார் விஜயகாந்த். அவ்வப்போது அங்கிருந்து தனது தனது புகைப்படங்களை வெளியிட்டு தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். இப்போது தேமுதிகவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் விஜய பிரபாகரன், கட்சி சம்பந்தமான நிகழ்ச்சி, நிர்வாகிகள் வீட்டு காரியங்களில் தவறாமல் ஆஜராகி விடுகிறார். இந்நிலையில், தருமபுரியில் தேமுதிக சார்பில் 1400 பேருக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அவர், "அப்பா அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். தருமபுரியில் பொங்கல் விழாவிற்கு போகிறேன் என்று அவரிடம் சொல்லிவிட்டுத்தான் வந்தேன். 

அதற்கு ’நீ போய் தொண்டர்களை பாரு. உனக்கு தைரியம் தானா வரும்’னு சொன்னார். அவர் சொன்ன மாதிரியே இப்போ ரொம்ப தைரியமாக இருக்கு. அப்பா உங்களை எல்லாம் கேட்டதாக சொல்ல சொன்னார். சீக்கிரம் வர்றேன்னு போய் சொல்லு, என் மக்களை தங்க தட்டில் வைத்து தாலாட்ட வர்றேன்னு போய் சொல்லு’ எனச் சொன்னார். அவருடைய உடல்நலம் பற்றி சமூக வலைதளங்களில் வரும் செய்திகளை பொதுமக்கள் யாருமே நம்ப வேண்டாம், உடல்நலம் தேறி திரும்பவும் அரசியலில் ஈடுபடுவார்.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ஆகட்டும், சட்டமன்றத் தேர்தல் ஆகட்டும் தேமுதிக இல்லாமல் யாராலும் ஆட்சி அமைக்க முடியாது, இதை நான் ஒரு தேமுதிக தொண்டனாக சொல்கிறேன்" எனக் கூறினார்.