தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர்அவரது துறையில் பணியிடங்களை நிரப்புவதில் ஊழல் செய்ததாக வருமான வரித்துறை புகார் கூறியுள்ளது. 20 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வருமான வரித்துறை தமிழக அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது.

ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் தன் மீது நடவடிக்கை எடுத்தால் 30 எம்எல்ஏக்களுடன் தினகரனுடன் இணையப்போவதாக முதலமைச்சரை மிரட்டினார் என தகவல் வெளியானது.

இதனால் அச்சமடைந்த எடப்பாடி பழனிசாமி அமைச்சர் விஜய பாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்காமல், கட்சியின் அமைப்புச் செயலாளர் பதவியை வழங்கினார். அதே நேரத்தில் அவர் மீது குட்கா  ஊழல் வழக்கும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று புதுக்கோட்டையில் கிராமிய கலைஞர்களை கௌரவிக்கும் விழா நடைபெற்றது. அதில் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலைஞர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் விஜய பாஸ்கர், இப்போது ஒரு சின்ன கூட்டம்தான் நடைபெறுகிறது. அடுத்த வாரம் புதுக்கோட்டையில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் ஒரு லட்சம் பேருக்கு மேல் திரட்டுவேன் என்று அவர் தெரிவித்தார்.

அப்போது நடக்கும் பாருங்க ஒரு கச்சேரி, செமையா இருக்கும்…அந்த கச்சேரியில் பலரின் முகத்திரை கிழிக்கப்படும்…பலரின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றுவேன் என ஆவேசமாக தெரிவித்தார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டி.டி.வி.தினகரனின் மீட்டிங் புதுக்கோட்டையில் நடைபெற்றது. அப்போது அமைச்சர் விஜய பாஸ்கரை, தினகரன் கடுமையாக விமர்சனம் செய்தார்.

தினகரனின் முகத்திரையை கிழித்து எறியப் போகிறாரா ? அல்லது எடப்பாடியில் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றப் போகிறாரா ? என்பது அடுத்த வாரம் தெரியும். அமைச்சர் விஜய பாஸ்கரின் புதுக்கோட்டைப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.