புதுக்கோட்டை திருவப்பூர் அருகே உள்ள கட்டியாவயலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுக்கூட்டம், அண்ணா பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனைத்தொடர்ந்து கூட்டத்தில் டி.டி.வி.தினகரன் பேசினார்.

அப்போது புதுக்கோட்டை மாவட்ட மக்களின் நலனுக்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தொடர்ந்து பாடுபடும். புதுக்கோட்டையில் இருந்து அமைச்சராக இருக்கும் டாக்டர் ஒருவர் தொடர்ந்து ஊழல் செய்து வருகிறார்.

அவர் வீட்டில் சோதனை செய்யாத துறைகளே இல்லை. ஆர்.கே.நகர் தேர்தலில் என்னை வெற்றிபெற வைக்கத்தான் அமைச்சர் விஜயபாஸ்கர் வேலை செய்கிறார் என நினைத்தேன். ஆனால் அவர் எடப்பாடி பழனிசாமியோடு இணைந்து தேர்தலை நிறுத்த தான் பணியாற்றினார் என பின்னர் தான் தெரிந்தது என குற்றம் சாட்டினார்..

நான் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு என்னுடைய குடும்பத்தினருடன் நடைபயிற்சி சென்றபோது, புதுக்கோட்டையை சேர்ந்த அமைச்சராக உள்ள டாக்டர் என்னை பார்த்து வணக்கம் வைத்தார். நானும் பதிலுக்கு வணக்கம் வைத்தேன்.

அப்போது ரெய்டு, சம்மன் என மத்திய அரசு தனக்கு அதிக குடைச்சல் கொடுப்பதாகவும் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி தன்னை கைவிட்டுவிட்டதாகவும் தன்னிடம் புலம்பினார், என்னை காப்பாற்றுங்கள் என கெஞ்சினார் என்று  டி.டி.வி.தினகரன்  புதுத் தகவலை தெரிவித்தார்.