வெளிநாடு தப்பியோடி தலைமறைவாக இருக்கும்  சாராய மன்னன்  விஜய் மல்லையா தன்னுடன் நீண்டகாலத் தொடர்பில் இருக்கும் பிங்கி லால்வாணியை திருமணம் செய்து கொள்ள உள்ளதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரத்து 500 கோடி கடன் பெற்று அதை திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச் சென்றார். கிங்பிஷர் ஏர்லைன்ஸ், யுனைடெட் புரூவெரீஸ் மதுபான நிறுவனம், எப்ஒன் ரேஸ், கிரிக்கெட் அணி என சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர் விஜய் மல்லையா.

கடனை திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு விஜய் மல்லையா தப்பி சென்றதால், அவர் மீது வங்கிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. உச்ச நீதிமன்ற உத்தரவின் பெயரில் மல்லையாவின் பாஸ்போர்ட்டை மத்திய அரசு முடக்கியது.

பல்வேறு கடன்மோசடி வழக்குகளில் விஜய் மல்லையா நேரடியாக ஆஜராகாத காரணத்தால் அவரை தேடப்படும் குற்றவாளியாகவும் நீதிமன்றம் அறிவித்தது. அதே நேரத்தில் விஜய் மல்லையா லண்டனில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சியில் தற்போது மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 2011-ம் ஆண்டு முதல் விஜய் மல்லையாவுடன் வாழ்ந்துவரும் பிங்கி லால்வாணியை அவர் 3-வதாக திருமணம் செய்ய உள்ளார் என்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன் கடந்த 1986-87-ம் ஆண்டு சமீரா தியாப் என்பவரை விஜய் மல்லையா முதலாவதாக திருமணம் செய்தார். அவரை விவாகரத்து செய்தபின், கடந்த 1993-ம் ஆண்டு ரேகா மல்லையா என்பவரை 2-வதாக விஜய் மல்லையா திருமணம் செய்தார்.

இவர்களுக்கு சித்தார்த், லீயானா, தன்யா ஆகிய குழந்தைகள் உள்ளனர். ரேகா மல்லையாவையும் சட்டப்பூர்வமாக விஜய் மல்லையா விவாகரத்து செய்தார்.

இந்நிலையில், விஜய் மல்லையா நடத்திய கிங்பிஷர் நிறுவனத்தில் விமானப் பணிப்பெண்ணாக பிங்கி லால்வாணி பணிக்கு சேர்ந்தார். அப்போது இருந்து விஜய் மல்லையாவிடம் நெருக்கமானார். இதையடுத்து, கடன் தொல்லையால் விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பிச் செல்லும் போது, அவருடன் பிங்கி லால்வாணியும் உடன் சென்றார்.

சமீபத்தில் விஜய் மல்லையாவை ஸ்காட்லாந்து போலீஸார் கைது செய்து லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது அவருடன் பிங்கி லால்வாணியும் உடன் வந்தார்.

இந்நிலையில் நீண்டகாலமாக விஜய்மல்லையாவும், பிங்கி லால்வாணியும் ‘ல்விங் டுகெதர்’ என்ற முறையில் வாழ்ந்து வருகின்றனர். இதையடுத்து பிங்கி லால்வாணியை முறைப்படி திருமணம் செய்ய விஜய் மல்லையா முடிவு செய்துள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.செய்திகள் தெரிவிக்கின்றன.

வங்கிகளை ஏமாற்றிவிட்டு  9 ஆயிரத்து 500 கோடி ரூபாயை ஆட்டையப்போட்டு  தையரியமாக வெளிநாட்டில் வாழ்ந்து வரும்  விஜய் மல்லையா 3-வதாக கல்யாணத்துக்கு ரெடியாகிவிட்டார்.