நடிகர் விஜயின் துணிச்சலை பாராட்டுவதாக ஒரு செய்தித் தாளுக்கு பேட்டி அளிக்கப் போய் தங்கதமிழ்ச் செல்வன் மீது திமுக மேலிடம் அதிருப்திக்கு ஆளாகியிருருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் பேனர் விழுந்த விவகாரத்தில் பேனரை அச்சடித்தவர்கள் மற்றும் லாரி டிரைவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்கள். ஆனால் யார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமோ? அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் அதிமுகவை சீண்டினார் விஜய். அதாவது பேனர் வைத்த அதிமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்காமல் பேனர் அச்சடித்து கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள் என்று கூறியிருந்தார்.

இந்த பேச்சு அரசியல் அரங்கில் விவாதப் பொருளானது. இதனால் விஜயின் கருத்து குறித்து திமுக தரப்பில் விளக்கம் பெற செய்தித்தாள் ஒன்று முயற்சி மேற்கொண்டது. ஆனால் விஜய் விவகாரத்தில் திமுக மேலிடத்தின் நிலைப்பாடு என்ன என்பது சீனியர்களுக்கு தெரியும். அதனால் அவர்கள் இந்த விஷயத்தில் வாய் திறக்க மறுத்துவிட்டனர்.ஆனால் கட்சியில் அண்மையில் இணைந்து கொள்கை பரப்புச் செயலாளர் ஆன தங்கதமிழ்ச் செல்வனுக்கு விஜய் – திமுக தலைமை இடையிலான வாய்க்காய் தகராறு குறித்து தெரியாது. இதனால் அவர் விஜயை பாராட்டி பேட்டி கொடுத்துவிட்டார். அதுவும் விஜயின் துணிச்சலை பாராட்டியே ஆக வேண்டும் என்று தங்கதமிழ்ச் செல்வன் கூற, திமுக விஜயின் துணிச்சலை பாராட்டிவிட்டது என்று செய்திகள் வெளியாகின. 

கடந்த 2011 தேர்தல் மட்டும் அல்லாமல் 2014 நாடாளுமன்ற தேர்தலிலும் விஜய் ரசிகர்கள் திமுகவிற்கு எதிராக களம் இறக்கப்ப்டடனர். 2011 தேர்தலில் விஜயின் அப்பா நேரடியாக களம் இறங்கி திமுகவிற்கு எதிராக வாக்கு சேகரித்தார். திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியிலேயே அவருக்கு எதிராக விஜய் ரசிகர்கள் வாக்கு சேகரித்தனர்.

 

இதன் பிறகு திமுக – விஜய் இடையே அவ்வப்போது கருத்து மோதல்களும் மூண்டது. ஆனால் இந்த வரலாறு எல்லாம் தெரியாமல் தங்கதமிழ்ச் செல்வன் விஜயை பாராட்ட வழக்கமாக இது போன்ற விஷயங்களை கவனிக்கும் அறிவாலய நிர்வாகிகள் திமுக தலையிடம் இந்த விஷயத்தை கொண்டு சென்றுள்ளனர். இதனை அறிந்து திமுக தலைமையும் தங்கதமிழ்ச் செல்வனிடம் விஷயத்தை எடுத்துக் கூறுங்கள் என்று டென்சன் ஆகியுள்ளது.