நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் தனது அடுத்த படத்திற்கு, கேப்மாரி என்கிற சி.எம் என பெயரிட்டிருக்கிறார்.  படப்பிடிப்புகள் முடிந்து விட்டன. 
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு இது 70-வது படம். தனது இயக்கத்தில் வெளியாகும் கடைசி படம் இது என்றும் ஏற்கனவே கூறியிருக்கிறார். ‘இந்த அரசு சினிமாத் துறையுடன் இணக்கமாக இருக்கிறது. எளிதில் அணுகக்கூடிய முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். இந்தச் சூழலில் கேப்மாரி என்கிற சி.எம் என தலைப்பிட்டு படம் எடுப்பது கண்டிக்கத்தக்கது’ என இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பற்றவைத்து விட்டார். 

ஆர்.கே.செல்வமணி இந்தக் கருத்தை கூறியது முதல் நிஜமாகவே எடப்பாடி பழனிசாமியை இழிவுபடுத்தும் விதமாக காட்சி அமைப்புகள் இருக்கிறதோ? என்கிற சந்தேகம் ஆளும்கட்சித் தரப்புக்கு ஏற்பட்டிருக்கிறது. எஸ்.ஏ.சந்திரசேகர் படம் என்றாலே அரசியல் நெடி இல்லாமல் இருக்காது.  அதே நேரத்தில் பிகில் பட ஆடியோ விழாவில் விஜய் பேசிய அரசியல் பேச்சும் சர்ச்சையை ஏற்படுத்தி பட ரிலீசுக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது. இந்தத் தருணத்தில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தனது படத்திற்கு கேப்மாரி என தலைப்பிட்டு படம் எடுப்பதை உள்நோக்கம் கொண்டதாக ஆளும்கட்சியினர் பார்க்கிறார்கள்.

இந்த தலைப்பு குறித்து இதுவரை விளக்கமளிக்காமல் இருந்து வந்த எஸ்.ஏ.சந்திரசேகர் இப்போது விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், ‘’
இளைஞர்களில் அதிகமானோர் கேப்மாரித்தனமாக இருக்கிறார்கள். இளைஞர்கள் இப்படி கேப்மாரித்தனமாக இருக்கக்கூடாது என்பதை சுட்டிக் காட்டவே படத்திற்கு கேப்மாரி என டைட்டில் வைத்துள்ளோம்.

 

வாழ்க்கையில் கேப்மாரித்தனமாக இருக்காதீர்கள். அப்படி இருந்தால் உங்கள் முடிவு இப்படித்தான் இருக்கும் என்பதை சொல்லும் படம் கேப்மாரி. அம்மா அப்பா சொன்னாலே கேட்கமாட்டார்கள். அதற்காகத் தான் நீதிபோதனைகளாக சொல்லாமல் கேப்மாரிகளுக்கு கேப்மாரி தனமாக படம் எடுத்திருக்கிறோம். என் மகன் அவரது ரசிகர்களை தவிர பெரும்பாலான இளைஞர்கள் கேப்மாரி தனமாக வாழ்ந்த்து வருகிறார். இந்த கேப்மாரிகள் அரசியல், சினிமா என பல துறைகளிலும் இருக்கிறார்கள். அவர்கள் ஆடம்பரமாக வாழ்கிறார்களே தவிர வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழவில்லை. மற்றபடி யாரையும் இந்தப்படம் சாடவில்லை’ என அவர் விளக்கமளித்து இருக்கிறார்.