சேகர் ரெட்டியின் டைரியில் இடம்பெற்ற அமைச்சர்கள் மீது, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரிடம் இருந்து, லஞ்ச ஒழிப்பு துறை பறிக்கப்பட்டு, நிரஞ்சன் மார்ட்டியிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணல் மன்னன் சேகர் ரெட்டியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட டைரியில், அமைச்சர்களுக்கு 300 கோடி ரூபாய் வரை பணம் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

மேலும், அந்த டைரியில் உள்ள தகவல்களின்படி, சேகர் ரெட்டியிடம் இருந்து பணம் பெற்ற, அமைச்சர்கள்  மீது நடவடிக்கை எடுக்க கோரி, வருமான வரித்துறை சார்பில், தலைமை செயலாளர் கிரிஜா வைத்யநாதனுக்கு கடிதம் அனுப்பப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இதையடுத்து, நேர்மையான அதிகாரியாக விளங்கும் கிரிஜா வைத்தியநாதன், சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் பெயர்களை வெளியிட வேண்டும் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்  கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனிடம் இருந்து லஞ்ச ஒழிப்புத் துறை பறிக்கப்பட்டு, உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டிக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்பு துறை ஆணையராக உள்ள தலைமைச் செயலாளருக்கே அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் மீதான லஞ்சு மற்றும் ஊழல் புகார்களை விசாரிக்கும் அதிகாரம் உள்ளது.

அதனால், நேர்மையான அதிகாரியான கிரிஜா வைத்தியநாதன், லஞ்ச புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஒரு வாரத்திற்கு முன்பே கிரிஜா வைத்தியநாதனிடம் இருந்து லஞ்ச ஒழிப்பு துறை பறிக்கப்பட்டதாகவும்,ஆனால், இணையதளத்தில் இதுவரை பதிவேற்றப்படவில்லை என்றும்  கூறப்படுகிறது.

நேற்று, முதல்வரை சந்தித்த அமைச்சர்களிடம், சேகர் ரெட்டி, டைரியே எழுதவில்லை, யாரும் கவலை அடைய தேவை இல்லை  என்று அவர் சொன்னதாக தகவல்கள் வெளியாயின. அதன் பின்னணி இதுதானோ என்றும் எண்ண தோன்றுகிறது.

லஞ்ச ஒழிப்பு துறை ஆணையராக பொறுப்பேற்றுள்ள நிரஞ்சன் மார்டி, தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர்,  சிறு, குறு. நடுத்தரத் தொழில்கள் துறை செயலாளர்.நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறைச் செயலாளர்.  உள்துறைச் செயலாளர், புள்ளியியல் மற்றும் பொருளியல் துறையின் ஆணையாளர் என பல்வேறு பொறுப்புக்களை வகித்துள்ளார்.

எனினும், கடந்த 2013 ம் ஆண்டு ஜெயலலிதாவால் ஓரம் கட்டப்பட்டார். அவ்வாறு ஜெயலலிதாவால், ஓரம் கட்டப்பட்ட நிரஞ்சன் மார்டியை, தமது பாதுகாப்புக்காக, மீண்டும் முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புக்கு கொண்டு வந்துள்ளார் எடப்பாடி என்று கோட்டை வட்டாரங்கள் கூறுகின்றன.