மத்திய அரசை விமர்சித்து அ.தி.மு.க.வின் நியூஸ்பேப்பரில் கால் பக்கம் கவிதை எழுதியதற்கு மறுநாளே எடப்பாடியாருக்கு எதிரான லஞ்ச ஒழிப்பு வழக்கு விஸ்வரூபமெடுக்க துவங்கியுள்ளது! ஆளும் அணி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது இந்த விவகாரம். 

அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘நமது அம்மா’வில் பெட்ரோல், டீசல் விலையேற்ற விவகாரம் குறித்து ‘ஆவேச கூச்சலும்! அடிவயிறு எரிச்சலும்’ எனும் தலைப்பில் கடந்த செவ்வாயன்று ஒரு கவிதை வெளியாகி இருந்தது. இதில் மத்தியில் ஆளும் பி.ஜே.பி.யை வெளுத்தெடுத்திருந்தனர். ’இந்த நாட்டில் நிம்மதியாய் வாழ வழியில்லை! மத்தியில் ஆளும் அரசு அபாரமாய் நடிக்குது! பி.ஜே.பி. ஆளாத மாநிலங்களை மாற்றாந்தாய் போக்கோடு நடத்துது’ என்று வறுத்தெடுத்திருந்தனர். 

இதை வாசித்த தமிழக பி.ஜே.பியின் வி.ஐ.பி.க்கள் கடுமையாக டென்ஷனடைந்தனர். உடனடியாக அந்த கவிதை ஸ்கேன் செய்யப்பட்டு, இந்தி மொழிபெயர்ப்புடன் பி.ஜே.பி. தலைமைக்கு அனுப்பப்பட்டன. 

இதை வாசித்த அமித்ஷா கண் சிவந்ததாக தகவல். நமது அம்மா! என்பது அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கை. ஆகவே இந்த கவிதையானது எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இருவரது ஒப்புதலின் படிதான் வந்துள்ளது, ஆக அவர்கள்  நம்மை விமர்சிக்க துவங்கிவிட்டார்கள், எப்போவோ பெரும்பான்மை இழந்துவிட்ட இந்த அரசாங்கமானது நம் தயவில் ஓடிக் கொண்டிருக்க,

இவர்கள் நம்மையே குத்திப் பார்ப்பதென்றால்  ஏன் பொறுக்க வேண்டும்? என்று தமிழக பி.ஜே.பி.யினர் தலைமையிடம் ஆதங்கத்தோடு மன்றாடினர். அதை மெளனமாக கேட்டுக் கொண்டது தலைமை. 

இந்நிலையில் நேற்று புதன்கிழமையன்று தமிழக முதல்வர் மீதான லஞ்ச ஒழிப்பு துறை தொடர்பான வழக்கொன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் நிலை என்ன என்பது குறித்து லஞ்ச ஒழிப்பு துறையிடம் கேட்டு விளாசித்தள்ளிவிட்டது ஐகோர்ட். 

அதாவது நெடுஞ்சாலை துறைக்கான பணி ஒப்பந்தங்கள் முதல்வரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் பினாமிகளாக செயல்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. சுமார் நான்காயிரம் கோடிகளுக்கு  மேற்பட்ட தொகை மதிப்புடையது இது. முதல்வரின் துணையுடன் நடந்துள்ள மிகப்பெரிய ஊழல் இது! எனவே லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திட வேண்டும்! என்று துவக்கத்தில் புகார் கொடுத்திருந்தார்.

பிறகு இந்த விசாரணையானது பாரபட்சமின்றி நடக்க, வேறு சிறப்பு விசாரணை அமைப்புக்கு மாற்றிட  கோரி மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். 

ஆர்.எஸ்.பாரதி சார்பில் வக்கீல் என்.ஆர்.இளங்கோ ஆஜரானார். எதிர்தரப்பில் அட்வோகேட் ஜெனரல் விஜய்நாராயண் ஆஜராகியிருந்தார். 

நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி அது தொடர்பான விவரங்களை விளக்கி கவரை சீல் செய்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது அட்வோகேட் ஜெனரல் தரப்பு. ஆனால் அந்த கவரை பிரித்துப் பார்க்க நீதிபதி மறுத்துவிட்டார். பிறகு அவர்...

“மனுதாரர் கொடுத்த புகார் மீது நடத்தப்பட்ட விசாரணை, ஒப்பந்த பணிகள் தொடர்பான நிபுணர் குழு விசாரணை, யாரிடம் எல்லாம் விசாரணை நடந்தது என்பது குறித்து வரும் திங்கட்கிழமை லஞ்ச ஒழிப்பு துறை விவர அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.” என்று கண்டிப்புடன் உத்தரவிட்டிருக்கிறார். 

ஆக சென்னை உயர்நீதிமன்றமானது எடப்பாடியாருக்கு எதிரான வழக்கை உன்னிப்பாக எடுத்துக் கொள்ள துவங்கியிருப்பதாகவும், நமது அம்மாவில் கவிதை வந்த மறுநாளே இப்படியான அதிரடிகள் துவங்கியிருப்பதாகவும் கருத்துக்களை பரப்ப துவங்கியுள்ளனர் அரசியல் விமர்சகர்கள். 

எடப்பாடியாருக்கு இந்த வழக்கு கூடிய விரைவில் பெரும் சவாலாக மாறும்! இந்த வழக்கில் மிக தெளிவாக விசாரணை நடத்திட சொல்லி மத்தியிலிருந்து உத்தரவு வரும் பட்சத்தில் மாநில அழுத்தங்களுக்கு லஞ்ச ஒழிப்புத்துறையின கலங்கிட மாட்டார்கள்! இனி டாப் கியருக்கு மாறும் இந்த வழக்கு விசாரணை: என்கிறார்கள்.