திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனிச்சின்னத்தில்தான் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். 

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியை உதயசூரியன் சின்னத்தில் நிற்க வைக்க தலைமை முடிவு செய்தது. ஆனால், இதனை கூட்டணி கட்சிகள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். 

இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ஆரம்ப கல்வி முதல், ஆராய்ச்சி கல்வி கட்டணம் வரை இலவச கல்வி என அரசு ஆணை பிறப்பித்துள்ளதற்காக, புதுச்சேரி முதல்வரை சந்தித்து திருமாவளவன் பாராட்டுகளை தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனி சின்னத்தில் தான் போட்டியிடும் என்று அறிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் கொரோனா  தடுப்பு ஊசி பரிசோதனை இன்று தொடங்கியுள்ளது வரவேற்கத்தக்கது என்றார். 

முன்னதாக வரும் சட்டப்பேரவை தேர்தலில் மதிமுக தனிச் சின்னதில்தான் போட்டியிடும். உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிட ஒப்புக்கொண்டதாக வெளியான தகவல் உண்மையில்லை எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.