ஜெயலலிதாவுக்கு அப்பலோவில் என்ன நடந்தது? ஆளுநர் அதிரடி விளக்கம்…

காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அப்பலோ மருத்துவர்கள்,லண்டன் மருத்துவர்கள்,டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் உள்ளிட்டோர் சிகிச்சை அளித்தனர், நன்கு உடல் நலம் தேறி வந்த ஜெ திடீர் மாரடைப்பு காரணமாக டிசம்பர் 5 ஆம் தேதி மரணமடைந்தார்.

ஆனால்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவரை பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை.அவரது புகைப்படத்தைக்கூட வெளியிடவில்லை. இதனால் அவரது மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டள்ளதாக பொதுவாக கருத்து நிலவி வருகிறது.

இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு, மத்திய அரசு, அப்பலோ மருத்துமனை ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையும், அவர் மறைவுக்கு பிறகும் நடந்தது என்ன? என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் எழுதிய கடிதம் தற்போது வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக  டிசம்பர்  7-ந் தேதி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் எழுதியுள்ள கடிதத்தில் ஜெயலலிதா தீவிர காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவு காரணமாக செப்டம்பர் 22-ந் தேதி சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

தொடக்கத்தில் அவருடைய உடல்நிலை சீராக இருந்தது. பின்னர் திடீரென மோசமடைந்தது. 50 நாட்களுக்கு மேலாக டாக்டர்கள் அளித்த தீவிர சிகிச்சைக்கு பிறகு அவருடைய உடல்நிலை சற்று தேறியதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நவம்பர் 19 ஆம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டாதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்  டிசம்பர் 4-ந் தேதி தான்  மும்பையில் இருந்தபோது, ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அவருடைய உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தகவல்  தெரிவிக்கப்பட்டதையடுத்து உடனடியாக சென்னை வந்ததாகவும் அந்த கடிதத்தில் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து ஆபத்தான நிலையில்  இருந்த ஜெயலலிதா டிசம்பர் 5 ஆம் தேதி உயிர் பிரிந்ததாக அப்பலோ மருத்துவமனை அறிவித்தாக தெரிவித்துள்ளார்.

5 ஆம் தேதியன்றே அதிமுக வின் பொருளாளரும், மூத்த அமைச்சருமான ஓபிஎஸ் தன்னை வந்து சந்தித்ததாகவும், ஜெயலலிதாவின் மரணத்தை தொடர்ந்து கட்சி எம்.எல்.ஏக்கள் அனைவரும் தன்னை அ.தி.மு.க.வின் சட்டமன்ற தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுத்து தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாக கடிதம் அளித்தாக குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இந்திய அரசியல் சட்டப்பிரிவு 164(1)ன் கீழ் பன்னீர் செல்வத்தை  தமிழக முதலமைச்சராக நியமித்து உத்தரவிட்டதாக உள்துறை அமைச்சகத்துக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.