கருணாநிதியை தவிர இது போன்ற ஜகஜால புரட்டை உலகில் யாரும் செய்ய முடியாது என முரசொலி முறைகேடு பற்றி வைகோ  பேசிய பழைய வீடியோவை வெளியிட்டு திமுகவினரை தெறிக்கவிட்டு வருகிறார்கள் ரஜினி ஆதரவாளர்கள். 

துக்ளக் 50வது பொன் விழாவில் நடிகர் ரஜினிகாந்த், முரசொலி வைத்திருந்தால் அவர் திமுகவினர், துக்ளக் வைத்திருந்தால் அவர் அறிவாளி என்று பேசிய பேச்சு, திமுகவினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.  இதனை தொடர்ந்து திமுகவினர் நடிகர் ரஜினிகாந்தை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்கு ரஜினிகாந்த் ஆதரவாளர்களும் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் முரசொலி பத்திரிக்கை குறித்து மதிமுக பொது செயலாளர் வைகோ பேசிய வீடியோ ஒன்றை ரஜினிகாந்த் ரசிகர்கள் வெளியிட்டு திமுகவினரை திக்குமுக்காட வைத்துள்ளனர். மதிமுக சார்பில் மதுரையில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் முரசொலி பத்திரிகை குறித்து வைகோ பேசும்போது: கருணாநிதி மார்ச் 8,1942ம் ஆண்டு திராவிட நாடு என்ற பத்திரிகையை தொடங்கியதாக தெரிவித்துள்ளார். முரசொலி பத்திரிகை 1942ம் ஆண்டில் இருந்து அச்சிட்டு வருவதாக கூறும் கருணாநிதி, முரசொலி பத்திரிக்கை வார இதழாக இருந்த போது 1956ம் ஆண்டு கருணாநிதி பெயரிட்ட முரசொலி பத்திரிகையில் மலர் 3 என்று அச்சிட பட்டுள்ளது.

அப்படியானால் 1953ம் ஆண்டு முரசொலி பத்திரிகையை தொடங்கினாரா கருணாநிதி என்று கேள்வி எழுப்பியுள்ளார் வைகோ. மேலும் கருணாநிதி எழுதிய நெஞ்சுக்கு நீதியில் பல பொய்யான செய்திகளை செதுக்கியுள்ளதாகவும், இதுகுறித்து தான் வாதம் செய்யவும் தயார் என தெரிவித்த வைகோ, 1948ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி முரசொலி பத்திரிகை தொடங்கியதாக நெஞ்சுக்கு நீதியில் எழுதி இருப்பதாகவும், ஒரே நபர் கருணாநிதி மூன்று விதத்தில் செய்திகளை வெளியுட்டுள்ளதாகவும், இது போன்ற ஜகஜால புரட்டை கருணாநிதியை தவிர இந்த உலகில் யாரும் செய்ய முடியாது என வைகோ பேசியுள்ளார்.

மதிமுக பொது செயலாளர் வைகோ சில வருடங்களுக்கு முன் பேசிய இந்த வீடியோவை ரஜினிகாந்த் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். இதற்கு என்ன பதில் தருவது என்று தெரியாமல் முழி பிதுங்கி நிற்கின்றனர் திமுக உடன்பிறப்புகள். 

 

துக்ளக் விழாவில் ரஜினி பேசியதை கண்டு கொள்ளாமல் இருந்திருக்கலாம்; தேவை இல்லாமல் பதில் கொடுப்பதாக நினைத்து முரசொலி இயக்குனர் உதயநிதி ஸ்டாலின் விவகாரத்தை பெரிதாக்கி விட்டதாக திமுக மூத்த தலைவர்கள் புலம்பி வருகின்றனர்.