சென்னை பல்கலைக்கழக துணை வேந்தராக சூரப்பா நியமனம் குறித்து தமிழக அரசு ஆலோசித்திருக்க வேண்டும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.

காவிரி மேலாண் வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் வீர்யத்துடன் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை, அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக சூரப்பா என்பவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமனம் செய்திருந்தார். சூரப்பாவின் நியமனத்துக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் அதிருப்தி தெரிவித்து வந்தனர். 

துணை வேந்தராக சூரப்பா நியமனம் செய்யப்பட்டதை அரசியலாக்க வேண்டாம் என்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சார்பில் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டிருந்தது.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் இது குறித்து கருத்து, காவிரி கேட்டாம் துணைவேந்தரை அனுப்பியுள்ளார்கள் என்று கூறியிருந்தார்.

காவிரி போராட்டம் நடக்கும் இந்த சமயத்தில் கன்னடர் ஒருவரை பல்கலைக்கழக துணை வேந்தராக நியமனம் செய்திருப்பது சரியான முடிவு இல்லை என்று ரஜினிகாந்த் கூறியிருந்தார். 

அதிகாரத்துக்குட்பட்டே சென்னை, பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் அரசுக்கு எந்த சம்பந்தம் இல்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார்.

இந்த நிலையில், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நாமக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் குறித்து தமிழக அரசை கலந்து ஆலோசித்திருக்க வேண்டும் என்று கூறினார்.