vetrivel petition has postponed to tomorrow by high court

ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியிட்டது தொடர்பான வழக்கில் தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பு வாதங்களை முன் வைக்க அவகாசம் கேட்டதை அடுத்து வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

உடல்நலக்குறைவு காரணாக கடந்த ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். சுமார் 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா, கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி காலமானார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரைப் பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. 

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள், அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. 

இதனிடையே ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் எழுப்பப்பட்டது. மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்தது தொடர்பான வீடியோ அல்லது போட்டோவை வெளியிட எதிர்கட்சி, மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கூறி வந்தனர். 

எடப்பாடி - பன்னீர் அணிகள் இணைப்புக்குப் பிறகு ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டது. இது தொடர்பான விசாரணை ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதற்கு முந்தைய நாள் டிடிவி தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல், ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டார். 

வெற்றிவேலின் இந்த செயல் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்று பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டினர். இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், வெற்றிவேல் மீது தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீன் நாயர், சென்னை, வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு தொடுத்தார். அதன் பேரில், அவரை கைது செய்ய போலீசார் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. 

இதையடுத்து ஜெயலலிதா தொடர்பான வீடியோ வெளியான விவகாரத்தில், சென்னை, உயர்நீதிமன்றத்தில் வெற்றிவேல் முன்ஜாமின் கோரி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. 

அப்போது, அரசு தரப்பு வாதங்களை முன் வைக்க அவகாசம் கேட்கப்பட்டது. இதைதொடர்ந்து ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியிட்டது தொடர்பான வழக்கில் தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் முன்ஜாமீன் மனு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது