அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் யாருக்குமே இல்லை என பெரம்பூர் எம்எல்ஏ வெற்றிவேல் தெரிவித்துள்ளார். 

அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், துணைப் பொதுச் செயலாளராக தினகரன் நியமிக்கப்பட்டது கட்சியின் சட்ட விரோதம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

கூட்டம் நடந்துகொண்டிருந்த நிலையில் காலை 10.40 மணியளவில் தினகரன் ஆதரவாளரான பெரம்பூர் எம்எல்ஏ வெற்றிவேல் தலைமை கழகம் வந்தார். 

ஆனால், அவர் கழக நிர்வாகி இல்லை என்பதால் கூட்டத்தில் பங்கேற்க அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் அலுவலகத்தின் கீழ் தளத்தில் சிறிது நேரம் காத்திருந்துவிட்டு புறப்பட்டுச் சென்றார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வெற்றிவேல், சசிகலாவும், டிடிவி தினகரனும் தான் அதிமுகவை இயக்குவதாகவும், அவர்களை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை எனவும் தெரிவித்தார். 

பிரமாணப் பத்திரத்தில் திருத்தம் செய்வதற்காக தலைமைக்கழக நிர்வாகிகளிடம் கையெழுத்து பெற்றதாக தெரிவதாகவும், அவ்வாறு செய்தாலும் சசிகலா, தினகரனை நீக்க முடியாது எனவும் குறிப்பிட்டார். 

டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் யாரையும் அதிமுக தலைமைக் கழகத்துக்குள் நுழையவிட மாட்டோம் என்று சிலர் பேசி வருவதாகவும், தற்போது என்னை தடுக்க யாருக்கும் தைரியம் வரவில்லை எனவும் பேசினார்.