சட்டசபையில் ஜனநாயக படுகொலைக்கு எதிராக திமுக போராட்டம் நடத்துவதற்கு பதிலடியாக திமுக மீது அதிமுக எம்.எல்.ஏ சட்ட்சபையில் உரிமை மீறல் புகார் அளித்துள்ளார்.


சபாஷ் சரியான போட்டி என்பார்கள் , அது போன்று திமுக அதிமுக மோதல் மீண்டும் துவங்கியுள்ளது. கடந்த 18 ஆம் தேதி சட்டசபையில் நம்பிக்கை வாகெடுப்பு கோரும் தீர்மானத்தின் மீது பெரும் அமளி ஏற்பட்டது .


சபாநாயகரின் மேசை உடைக்கப்பட்டது. அதன்பின்னர் சபாநாயகரை வெளியேற விடமல் சிலர் தடுத்து அவர் சட்டையை பிடித்து இழுத்ததில் சட்டை கிழிந்தது. இதையடுத்து திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். 


இதற்காக திமுக உண்ணாவிரதம் இருந்து வருகிறது. இதற்கு பதிலடியாக அதிமுக பெரம்பூர் எம்.எல்.ஏ வெற்றிவேல் திமுக உறுப்பினர்கள் மீது உரிமை மீறல் புகார் அளித்துள்ளார்.


இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் அவர் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:-

கடந்த 18-இல் சட்டப் பேரவையில் அரசுக்கு நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடந்தப்பட்டது. அப்போது, திமுக எம்எல்ஏக்களால் வரம்பு மீறிய சம்பவங்கள் நடந்தன. சிலர் மேஜையை உடைத்து, சேர்களை வீசினர்.


பேரவைத் தலைவர் ஏற்கெனவே ஒரு சாலை விபத்தில் இருந்து தப்பித்தவர். அவரது உடல் மீது கைவைத்து பிடித்துத் தள்ளினர். இது எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. ஆகவே புகார் அளித்துள்ளேன்.


எனவே, கடந்த திங்கள்கிழமையன்று பேரவைத் தலைவரிடம் இதுபற்றி சில எம்எல்ஏக்களின் பெயரைக் குறிப்பிட்டு புகார் எழுதிக் கொடுத்துள்ளேன். அதை செவ்வாய்க்கிழமையன்று நினைவுபடுத்தி இருக்கிறேன்.


இந்தக் கடிதத்தை உரிமைக் குழுவுக்கு அனுப்புவதாக பேரவைத் தலைவர் தனபால் தெரிவித்துள்ளார்.. முதலில் 15 நாள் டைம் கொடுத்ததை திமுகவினர் எதிர்த்தனர். காலம் தாழ்த்தினால் குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் என்று கூறியவர்கள் பின்னர், தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு ஒரு வாரம் கழித்து நம்பிக்கைத் தீர்மானத்தை கொண்டு வரும்படி கேட்கின்றனர். 


உணர்ச்சிவசப்பட்டு பேசுவது வேறு. இடத்தைவிட்டு எழுந்து சென்று செயல்படுவது என்பது வேறு. எதிர்க்கட்சித் தலைவர், துணைத் தலைவர் வேடிக்கை பார்த்தனர் . அங்கே நடந்த நிகழ்வுகளை கண்டிக்கவில்லை. சபாநாயகர் இதில் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்றார்.