கடந்த 2017-ம் ஆண்டில் சட்டப்பேரவைக்குள் குட்காவை எடுத்துவந்த  திமுக எம்.எல்.ஏ.க்கள், தடை செய்யப்பட்ட குட்கா தமிழகம் முழுவதும் தங்கு தடையின்றி கிடைப்பதாகப் புகார் கூறினர். தடை செய்யப்பட்ட பொருட்களை அவைக்குள் கொண்டு வந்தது அவையின் உரிமையை மீறிய செயல் என்று சபாநாயகர் உரிமை மீறல் நோட்டீசை மு.க. ஸ்டாலின்  உள்பட 21 திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அனுப்பினார். ஆனால், இதை எதிர்த்து திமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான அமர்வில் இறுதி விசாரணை கடந்த 12-14 ஆகிய தேதிகளில் நடந்தது. இந்த வழக்கில் திமுக தரப்புக்கும் தமிழக அரசு தரப்புக்கும் காரசாரமான விவாதம் நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிமன்றம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது. இந்நிலையில் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. சென்னை உயர்நீதிமன்ற அமர்வு நாளை காலை தீர்ப்பளிக்கிறது.