தமிழகத்துக்கு தற்போது துணை முதல்வரை நியமிக்க வேண்டியதை அ.தி.மு.க. தலைமை தான் தீர்மானிக்க வேண்டும் என மத்திய நகர்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த மாதம் 22-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் , அவரது உடல் நிலையை வைத்து சில அரசியல் கட்சித் தலைவர்கள் புதிய முதல்வர், துணை முதல்வரை அறிவிக்க வேண்டும் என்று சர்ச்சையை கிளப்பி வருகின்றனர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி , பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தொடர்ச்சியாக புதிய முதல்வர் குறித்து பேசி வருகின்றனர். மத்திய பாரதிய ஜனதா அரசும், மறைமுகமாக, புதிய முதல்வரை நியமிக்க அழுத்தம் கொடுத்து வருகிறது.
ஆனால், பாரதியஜனதா கட்சியிலேயே பெரும்பாலான தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய நகர்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து அறிய நேற்று அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு மருத்துவர்களின் முதல்வரின் உடல் நலன் குறித்து கேட்டறிந்தார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், " முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார் என் மருத்துவர்கள் என்னிடம் தெரிவித்தனர். அவர் விரைவில் உடல் நலன் பெற்றுவிடுவார் என நான் நம்புகிறேன். அவரின் உடல் நிலை குறித்து தேவையில்லாத வததந்திகளை யாரும் நம்ப வேண்டாம் " என்றார்.

இதற்கிடையே இன்று பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவை ஆளுநர் மாளிகையில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு சந்தித்துப் பேசினார். அதன்பின், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவரிடம், தமிழகத்துக்கு துணை முதல்வர் நியமிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் கூறுகையில், " தமிழகத்தில் பெரும்பான்மையாக இருந்து ஆட்சி செய்யும் அ.தி.மு.க. தலைமை தான் துணை முதல்வர் நியமிப்பதை முடிவு செய்ய வேண்டும். மற்றவகையில் துணை முதல்வரை நியமிப்பது குறித்து பேச யாருக்கும் உரிமையில்லை.
தேவையில்லாமல் இந்த பிரச்சினையை கிளப்புகிறார்கள். பிரதமர் மோடி வெளிநாடு செல்லும்போதெல்லாம், புதிய பிரதமர் வேண்டுமென்ற கோரிக்கை எழவில்லையே. அப்போது, ஆட்சி நிர்வாகத்தை மத்திய அமைச்சர்கள் நன்றாகத்தானே பார்த்துக் கொள்கிறோம்.

அதுபோல இப்போது தமிழகத்தின் நிர்வாகத்தை அமைச்சர்கள் நன்றாகத்தானே கவனிக்கிறார்கள். அப்படியிருக்க துணை முதல்வர் நியமிப்பது குறித்து யாரும் கருத்து சொல்ல தேவையில்லை. அதை அதிமுக தலைமை பார்த்துக்கொள்ளும் " என தெரிவித்தார்.
