ஏதோ ஒரு மிகப்பெரிய அரசியல் எழுச்சி எதிர்பார்ப்புடன் ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே இரண்டு நாள் மாநாடை நடத்திக் கொண்டிருக்கிறது தி.மு.க. தேர்தல் அரசியலுக்கு இந்த மாநாடு எந்தளவுக்கு அக்கட்சிக்கு கைகொடுக்கப்போகிறதோ தெரியவில்லை. ஆனால் ஸ்டாலின் நம்புகிறார், நடத்துகிறார். 

இந்நிலையில், மாநாட்டின் போக்கில் சிறு சிறு தலைப்புகளை கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலருக்கு வழங்கி பேச வைத்துள்ளார் ஸ்டாலின். அந்த வகையில் பேச வந்த சென்னையை சேர்ந்த சாதிக், ‘தமிழகத்து இளைஞர்கள் யார் அழைத்து வருவார்கள்? என்று ஒரு பேச்சு போய்க் கொண்டிருக்கிறது. 

வேங்கை மகன் அழைத்தால் தமிழக இளைஞர்கள் செல்வார்களா? மாட்டார்கள். விருமாண்டி மகன் அழைத்தார் செல்வார்களா? மாட்டார்கள். ஆனால் முத்தமிழறிஞர் கருணாநிதியின் மகனான எங்கள் தளபதி அழைத்தால் தமிழக இளைஞர்கள் படை திரட்டி வருவார்கள் இது உறுதி.” என்று பொளேர் வார்த்தைகளில் போட்டுத் தாக்கினார். 

அதேபோல் ஈரோட்டை சேர்ந்த சத்தியவதி, “டெல்லியில் ஒரு நிர்பயா இறந்தததுக்கு தேசமே அந்த மகளை வாரி எடுத்துக் கொண்டு கண்ணீர் வடித்தது. ஆனால் எங்கள் தமிழ்நாட்டில் பசுந்தளிர் ஹாசினியில் ஆரம்பித்து எத்தனையோ சிறுமிகள், இளம்பெண்கள், பெண்கள் துள்ளத் துடிக்க வன்புணர்வுக்கும், கொலைக்கும் ஆளாகியிருக்கிறார்கள். ஆனால் யாரும் கண்டு கொள்வதில்லை, இந்த மாநிலத்தை ஆளும் அதிகார மையமும் கண்டு கொள்ளவில்லை. இதுதான் தமிழனின் நிலை.” என்று வீரியம் காட்டியபோது மாநாட்டு பந்தல் மனமுருகியது.