velumani cancel his astrelia trip

பலத்த மழை காரணமாக சென்னையே மிதந்து கொண்டிருக்கையில் வெளிநாடு பயணமா என கடும் எதிர்ப்பு எழுந்ததால் அமைச்சர் வேலுமணி, தனது ஆஸ்திரேலியா பயணத்தை ரத்து செய்தார்.

சென்னையில் நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மழை தொடர்பான ஆய்வுகளை நடத்தினார். தங்கசாலையில் மழை பாதிப்புகளை பார்வையிட்ட முதலமைச்சர் அங்கிருந்து பழைய வண்ணாரப்பேட்டை மற்றும் ஆர்.கே.நகர் பகுதிகளிலும் மழை பாதிப்புகளை ஆய்வு செய்தார்.

இதைத் தொடர்ந்து அமைச்சர்கள் சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.. சென்னை தி.நகர் துரைசாமி சுரங்கப்பாதையில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, வீரமணி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

மாதவரத்தில் அமைச்சர்கள் காமராஜ், பெஞ்சமின் ஆய்வு நடத்தினர். ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், மழை பாதிப்புகள் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு நடத்தினார்.

கொடுங்கையூர் சத்தியமூர்த்தி நகரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் உணவு வழங்கினார். ஆவடியில் மழை பாதிப்புகள் குறித்து கொட்டும் மழையில் அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், பெஞ்சமின் ஆய்வு நடத்தினர்.

பள்ளிப்பட்டு குடிநீர் நீரேற்று நிலையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். அமைச்சர் வேலுமணி தனது ஆஸ்திரேலிய பயணத்தை ஒத்தி வைத்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து செய்தியளாக்ளிடம் பேசிய அவர், "3 மாதத்திற்கு முன்பே திட்டமிட்டதுதான் ஆஸ்திரேலியா பயணம், ஆனால் தற்போது பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

ஆனால் சென்னை நகரமே வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் நிலையில் அமைச்சர் வெளிநாடு பயணமா என கடும் எதிர்ப்பு எழுந்ததால் அமைச்சர் வேலுமணி ஆஸ்திரேலிய பயணத்தை ரத்து செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன