நாடகக் காதலை திருமாவளவன் ஆதரித்தால் நான் எதிர்ப்பேன் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். 

வேல்முருகன், திருமாவளவன் திமுக என ஒரே அணியில் இருக்கிறார்கள். ஒத்தக் கருத்துடையவர்களாக இருக்க்கிறார்கள். இந்நிலையில் வேல்முருகனிடம் நாடகக் காதலை ஆதரிக்கிறீர்களா? எனக் கேட்கப்பட்டது. இதற்கு அவர், ‘’பத்து மாதம் பெற்று, வளர்த்து, ஆளாக்கி அவர்கள் இந்த மண்ணில் நன்றாக வர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். பெற்றோர்கள் வயிறு எப்படி பற்றிக் கொண்டு எரியும் தெரியுமா? பெரியாரின் எல்லாக் கருத்துக்களையும் நான் ஏற்றுக்கொள்ளவில்லை. எனக்கு என்று ஒரு கட்சி இருக்கிறது. எனக்கு என்று கொள்கைகள் இருக்கிறது. நாடகக் காதலை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. திருமாவளவன் ஏற்றுக்கொண்டால் நான் ஏற்றுக்கொள்ள வேண்டுமா?

பள்ளிச் சீருடையில் புத்தகத்துடன் பெற்றோரின் அனுமதி இன்றி வெளியே சென்று திருமணம் செய்து கொள்கின்ற நாடகக்காதல் திருமணத்தை நான் எதிர்க்கிறேன். திருமணம் செய்து கொள்ள வயது வரம்பு வேண்டும். கல்லூரி யூனிபார்ம், பள்ளி சீறுடையில் ஒரு பெண் ஒரு பையனுடன் ஓடுறது, இழுத்துக் கொண்டு செல்வது போன்ற கலாச்சாரம், காட்சி அமைப்பை சினிமாவில் நான் எதிர்க்கிறேன்.

எனக்கு அதில் உடன்பாடில்லை. இந்தக் கருத்தை நான் எங்கு வேண்டுமானாலும் சொல்வேன். நான் வெட்டி பந்தா தேடிக் கொள்ள விரும்பவில்லை. பாதிக்கப்படுகின்ற பெண் எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஏமாற்றப்படும், ஏமாற்றப்பட்டு என்னிடத்தில் வந்து உதவி கேட்டால் செய்வேன். பலநூறு பெண்களுக்கு அந்த உதவி செய்து கொண்டிருக்கிறேன். பல்வேறு குற்றங்களில் மாட்டி சிறையில் இருப்பவர்களை காப்பாற்றி வருகிறேன்.

 என்னுடைய நோக்கத்தில் நான் சரியாக இருக்கிறேன். அண்ணன், தம்பி, மாமன், மச்சான் இவர்களை உதாசீனப்படுத்திவிட்டு வீட்டை விட்டு சென்று  வெளியேறுவது, அதனால் சந்திக்கின்ற துன்பங்களை நான் விரும்பவில்லை. என்னுடைய தங்கை என் உடன் பிறந்தவர்கள் வேதனைக்கு உள்ளாக்கப்படும் போது அங்கே நான் சும்மா இருக்க மாட்டேன். பெரியாரிஸ்டுகள் ஆதரித்தால் எனக்கு என்ன இருக்கிறது? நாடகக் காதலை பற்றி அவர்கள் கேட்காவிட்டால் நான் கேட்பேன். யார் நாடகக் காதல் செய்வதை ஆதரித்தாலும் எதிர்ப்பேன். அது திமுகவாக இருந்தாலும் சரி அண்ணா திமுக இருந்தாலும் சரி எந்த கூட்டணியில் இருந்தாலும் நான் இதுகுறித்து கேள்வி கேட்பேன்’’ என அவர் தெரிவித்துள்ளார்