வேட்பாளர் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக அதாவது தேர்தல் தேதி அறிவித்த அன்றே செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் பணிகளை துவக்கினார் ஏ.சி. சண்முகம்.

பணப்புழக்கம் அதிகம் இருந்ததாகவும், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டதாகவும் கூறி வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. சுமார் 13 கோடி ரூபாய் ரொக்கம் சிக்கியது. இந்த பணம் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு சொந்தமானது என்று கூறப்பட்டது. ஆனால் தேர்தல் ரத்தால் மனதளவில் அதிகம் பாதிக்கப்பட்டது அதிமுக சார்பில் களம் இறங்கிய ஏசி சண்முகம் தான். 

ஏனென்றால் தேர்தல் ரத்து செய்யப்பட்ட நாள் வரை கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய் வரை அவர் செலவழித்திருப்பார் என்கிறார்கள். இதனால் தான் தேர்தல் ரத்து குறித்து பேசிய போது கண்களில் தண்ணீர் வரும் அளவிற்கு கதறினார் ஏ.சி. சண்முகம். இந்த நிலையில் வேலூர் தொகுதி தேர்தல் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக வேட்பாளராக ஏசி சண்முகமே அறிவிக்கப்பட்டார்.

ஏற்கனவே 50 கோடி ரூபாய் வரை காலியான நிலையில் மீண்டும் சண்முகம் எப்படி சமாளிப்பார் என்று திமுக தரப்பு கொட்டாவி விட்டுக் கொண்டிருக்க. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாளே கூட்டணி கட்சி கூட்டத்தை கூட்டினார். விஜயகாந்தை சந்தித்தார். அமைச்சர் வீரமணியுடன் தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை செய்தார். 

தொடர்ந்து முதல் ஆளாக வேட்பு மனுவையும் தாக்கல் செய்துவிட்டார். இதோடு மட்டும் அல்லாமல் காலை 6 மணிக்கு நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தும் சண்முகம் இரவு பத்து மணி வரை ஓய்வே இல்லாமல் பிரச்சாரம் செய்து வருகிறார். இடை இடையே நிர்வாகிகள் சந்திப்பு, கூட்டணி கட்சியினருடன் ஆலோசனை என புயல் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறார். 

தேர்தலுக்கு இன்னும் நாள் இருக்கும் நிலையில் ஒன்றிய வாரியாக நடைபெறும் கூட்டத்தில் முக்கால்வாசியை ஏசி சண்முகம் முடித்துவிட்டார் என்கிறார்கள். மேலும் அமைச்சர்கள் விரைவில் தொகுதிக்கு வர உள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகளையும் சண்முகமே தீவிரமாக செய்து வருவதாக சொல்கிறார்கள். கரன்சி மழை கொட்டுவதால் கூட்டணி கட்சியினரும் காலை 6 மணிக்கே ஏசி சண்முகம் இருக்கும் இடத்தில் ஆஜர் ஆகிவிடுகிறார்கள்.