வேலூரில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தேர்தல் பணிகளை விரைவுபடுத்த முடியாமல் தவித்து வருகிறார்.

ஒரு பக்கம் ஏசி சண்முகம் மின்னல் வேகத்தில் தேர்தல் பணிகளை துவங்கி கிட்டத்தட்ட 75 சதவீதத்தை நிறைவு செய்துவிட்டார். ஆனால் திமுக தரப்போ திக்கு தெரியாமல் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் பொறுப்பாளர்கள் என்று திமுக தலைமையால் அறிவிக்கப்பட்ட பாதி பேர் கூட இன்னும் வேலூர் சென்று சேரவில்லை என்கிறார்கள். 

எ.வ.வேலு மட்டுமே தற்போதைக்கு வேலூரில் இருந்து தேர்தல் பணிகளில் கவனம் செலுத்துவதாக சொல்கிறார்கள். மற்ற தேர்தல் பொறுப்பாளர்கள் எல்லாம் வருகிறேன், வருகிறேன் என்பதோடு சரி அதன் பிறகு அவர்களிடம் இருந்து எந்த ரியாக்சனும் இல்லை என்று சொல்லப்படுகிறது. இது குறித்து தலைமையிடம் பல முறை முறையிட்டும் எந்த பிரயோஜனமும் இல்லை என்கிறார்கள். 

இதனால் துரைமுருகன் தன்னுடை ஆட்களை மட்டுமே நம்பி தற்போது தேர்தல் வேலைகளில் களம் கண்டு வருகிறார். ஆனால் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகள் கண் கொத்திப் பாம்பாக பின்தொடர்வதால் தேர்தல் செலவுகளில் தாராளம் காட்ட முடியாமல் துரைமுருகன் தவிக்கிறார். தேர்தல் செலவுகளுக்கு என்று ஸ்டாலினால் முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரும் தற்போதைய எம்.பி. ஒருவரும் நியமிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. 

ஆனால் அந்த எம்.பி.யோ வேலூரிலா தேர்தல் என்கிற ரீதியில் இருப்பதாக சொல்கிறார்கள். இது அனைத்துக்கும் காரணம் துரைமுருகனுடன் தற்போதைய சூழலில் விட்டமின் ப ரீதியில் தொடர்பில் இருந்தால் தங்களையும் வருமான வரித்துறை வளைக்கும் என்று அஞ்சுவது தான் காரணம் என்கிறார்கள். அதே சமயம் இடைத்தேர்தல் என்றால் திமுக தலைமையில் இருந்து கணிசமான ஒரு தொகை ஒதுக்கப்படுவது வழக்கம். 

அந்த தொகையை வைத்து தான் துரைமுருகன் தற்போது தேர்தல் வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறுகிறார்கள். இதேபோல் கதிர் ஆனந்த் ஒரு புறம் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டுகிறார். செல்லும் இடங்களில் எல்லாம் கதிர் ஆனந்திற்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை என்பது கண்கூடாக தெரிகிறது. இதே போல் கூட்டணி கட்சியினரும் பிரச்சாரத்திற்கு வர வேண்டும்என்றால் ஏகப்பட்ட டிமாண்டுகளை முன் வைக்கின்றனர்.

ஆனால், அதற்கு எல்லாம் தேவையான விட்டமின் பவை எங்கிருந்து எடுப்பது என்பதில் நீடிக்கும் குழப்பத்தால் கூட்டணி கட்சியினரையும் திமுக தரப்பால் திருப்திபடுத்த முடியவில்லை. இப்படி துரைமுருகன் தரப்பை தவிக்கவிட்டு ஸ்டாலின் கண்டுகொள்ளாமல் இருக்கிறாரா? இதில் ஏதும் உள்குத்து இருக்கிறதா என்று திமுகவினரே பேச ஆரம்பித்துள்ளனர்.