வேலூர் தொகுதியில் பாஜக கூட்டணியில் சார்பில் ஏ.சி. சண்முகத்துக்கு ஒதுக்க அந்த மாவட்ட அதிமுகவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டதாக கூறப்படும் நிலையில், பாஜகவுடன் கூட்டணியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக் கட்சி போன்ற கட்சிகளுக்கும் சீட்டு கேட்டு அதிமுகவுடன் பாஜக பேசி வருகிறது. இதில் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் கடந்த முறை பாஜக கூட்டணியில் வேலூர் தொகுதியில் போட்டியிட்டு இரண்டரை லட்சம் வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். 

திமுக, அதிமுக போன்ற கூட்டணியில் இடம் பெறாமல், பாமக, தேமுதிக கூட்டணியோடு தாமரை சின்னத்தில் நின்று ஏ.சி. சண்முகம் இவ்வளவு வாக்குகளைப் பெற்றார். இந்த முறை அதிமுக கூட்டணி ஆதரவுடன் போட்டியிட்டால் வெற்றி உறுதி என்ற நிலையில், வேலூர் தொகுதியை ஏ.சி. சண்முகத்துக்காகக் கேட்டுவருகிறது. இந்தத் தொகுதியில் ஏ.சி. சண்முகம் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. 

ஆனால், அதிகாரப்பூர்வமாக அதிமுக - பாஜக கூட்டணியை அறிவிக்காத நிலையில், வேலூர் தொகுதியில் அதிமுகவே போட்டியிட வேண்டும் உள்ளூர் அதிமுகவினர் தலைமைக்கு தெரிவித்திருக்கிறார்கள். கூட்டணி கட்சிகளுக்கு இந்தத் தொகுதியை ஒதுக்கக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்திவருகிறார்கள். இதுபற்றி வேலூர் அதிமுகவினர் சிலரிடம் பேசியபோது, “1998-ம் ஆண்டுக்கு பிறகு வேலூர் தொகுதியில் திமுக கூட்டணிதான் வெற்றி பெற்றுவந்தது. 

இதை 2014-ல் ஜெயலலிதா மாற்றி காட்டினார். கடந்த முறை அதிமுகவை தோற்கடிக்க ஏ.சி. சண்முகம் எல்லா வேலைகளையும் செய்தார். ஆனால், அம்மாவின் வழிகாட்டுதலில் எல்லா முயற்சிகளையும் அதிமுகவினர் முறியடித்தார்கள். பாஜகவுடன் கூட்டணி அமைந்தாலும் அமையாவிட்டாலும் இந்த முறை அதிமுகவே இங்கே போட்டியிட வேண்டும். இதை கட்சி தலைமை கவனத்தில் கொள்ள வேண்டும்.” என்று  தெரிவித்தார்கள்.