இந்துக்களை இழிவாக பேசிய திமுக தலைவர் மு.க ஸ்டாலின் போன்றவர்களை மக்கள் மத்தியில்  அம்பலப்படுத்தவே வேல் யாத்திரை என பாஜக தலைவர் எச்.ராஜா காட்டமாக தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இருந்து பாஜக சார்பில் வேல் யாத்திரை நடந்த உள்ளதாக பாஜகவால் அறிவிக்கப்பட்டது. இந்த யாத்திரை தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகள் உள்ள நகரங்கள் வழியாக செல்லும் எனவும் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், பாஜகவினரின் இந்த வெற்றிவேல் யாத்திரையை அனுமதிக்கக்கூடாது, யாத்திரை என்ற பெயரில் கலவரத்தை தூண்ட முயற்சி நடப்பதால் அதை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தின. 

\

யாத்திரைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்துக்கு பொதுநல வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், பாஜகவினரின் வெற்றிவேல் யாத்திரையை அனுமதிக்க முடியாது என்று நேற்று நீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனால் திருத்தணியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மலையின்மேல் யாத்திரை தொடங்க உள்ள நிலையில் பாஜக நிர்வாகிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். திருத்தணி முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

சென்னையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து புறப்பட்ட பாஜக தலைவர் எச்.ராஜா இந்துக்களை இழிவாக பேசிய திமுக தலைவர் மு.க ஸ்டாலின் போன்றவர்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தவே வேல்யாத்திரை நடத்த உள்ளோம். அதே போல் இதற்கு காவல்துறை அனுமதித்தால் பாஜக வேல்யாத்திரை நடத்தும், இல்லையெனில்  போராட்டம் நடத்தும் என அவர் கூறியுள்ளார்.