இந்துத்துவவாதிகள் சொல்வதையே தமிழக அரசும் செல்வதாக சிலர் சமூக ஊடங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த நிபந்தனையை வைத்து திமுக கூட்டணி கட்சிகளை விமர்சித்து பாஜக கேள்வி எழுப்பியிருக்கிறது. 

'மாட்டிறைச்சி திருவிழா' நடத்திய அதிமேதாவிகளும், 'பண்பாட்டு ஒடுக்குமுறை' என்று கூவிய திராவிடர் கழக வீரமணியும் இந்த உத்தரவை எதிர்த்து குரல் கொடுப்பார்களா என்று தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

மோட்டல்களுக்கு நிபந்தனை

தமிழகத்தில் சென்னையிலிருந்து தெற்கு நோக்கி செல்லும் அரசு பேருந்துகள் விழுப்புரம் அருகே உள்ள மோட்டல்களில் நிறுத்தப்படுவது வழக்கம். சுகாதாரமற்ற உணவு, அதிக விலைக்கு விற்பது, மிரட்டும் தொனியில் செயல்படுவது என மோட்டல்கள் மீது தொடர்ந்து புகார்கள் எழுந்தவண்ணம் இருந்தன. அண்மையில் விழுப்புரம் மோட்டல்களில் அரசு பேருந்துகள் நிற்பதற்கு தமிழக அரசு தடை விதித்தது. இதேபோல மாமண்டூரில் உள்ள அரசு மோட்டல் உரிமம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், மோட்டல்கள் செயல்படுவது குறித்து புதிய நிபந்தனைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு பேருந்துகள் நிறுத்தப்படும் நெடுஞ்சாலையோர உணவகங்களில் சைவ உணவு மட்டும்தான் தயாரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

நெட்டிசன்கள் கோபம்

குறிப்பாக சைவ உணவு மட்டுமே தயாரிக்க வேண்டும் என்ற நிபந்தனை சமூக ஊடகங்களில் பேசு பொருளாகியிருக்கிறது. இதுதொடர்பாக நெட்டிசன்கள் காரசாரமாக விவாதித்து வருகின்றனர். இந்துத்துவவாதிகள் சொல்வதையே தமிழக அரசும் சொல்வதாக சிலர் சமூக ஊடங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த நிபந்தனையை வைத்து திமுக கூட்டணி கட்சிகளை விமர்சித்து பாஜக கேள்வி எழுப்பியிருக்கிறது. இதுதொடர்பாக தமிழக பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தன்னுடைய கருத்தை சமுக ஊடகப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.

பாஜக விளாசல்

அதில், “அரசுப் பேருந்துகள் செல்லும் வழியில் சைவ உணவு விற்பனை செய்யும் உணவகங்களுக்கு மட்டுமே உரிமம் : தமிழக அரசு உத்தரவு. 'நான் என்ன சாப்பிட வேண்டும் என்று உத்தரவிடுவதற்கு அரசு யார்?' என்று கேட்ட முற்போக்குகளும், 'மாட்டுக்கறி என் உரிமை' என்று முழங்கிய கம்மிகளும், 'எங்கள் உணவு, எங்கள் உரிமை' என்று பொங்கிய விடுதலை சிறுத்தைகளும், 'மாட்டிறைச்சி திருவிழா' நடத்திய அதிமேதாவிகளும், 'பண்பாட்டு ஒடுக்குமுறை' என்று கூவிய திராவிடர் கழக வீரமணியும் இந்த உத்தரவை எதிர்த்து குரல் கொடுப்பார்களா? அல்லது இருட்டறைக்குள் சென்று ஓடி ஒளிந்து கொள்வார்களா?” என்று நாராயணன் திருப்பதி விமர்சனம் செய்திருக்கிறார்.”