கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தி இருக்கிறது. பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் அரசு அறிவுறுத்தி இருக்கிறது. எனினும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதில் எந்தவித தடையும் ஏற்படாது என்றும் அதற்கான கடைகள் வழக்கம் போல செயல்படும் எனவும் ஊரடங்கு உத்தரவில் தெரிவிக்கிப்பட்டிருந்தது.

அதன்படி மருந்தகங்கள், மளிகை, காய்கறி கடைகள் போன்றவை திறந்திருந்த நிலையில் அங்கு மக்கள் கூட்டமாக குவிய தொடங்கினர். இதனால் தற்போது அத்தியாவசிய பொருட்கள் விற்பனையாகும் கடைகளிலும் நேர கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. நாளை முதல் காலை 6 மணியில் இருந்து இரவு 2 மணி வரை மட்டுமே கடைகள் , சந்தைகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் செயல்பட வேண்டும் என அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் மார்ச் 29-ம் தேதி முதல் காய்கறி, மளிகைக் கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகளுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. கோயம்பேடு சந்தை உள்ளிட்ட காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை செயல்பட வேண்டும். இதேபோல், பெட்ரோல் பங்குகளும் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை செயல்படும்.

மேலும், காய்கறி உள்ளிட்ட சரக்குகளை ஏற்றி வரும் வாகனங்கள் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இயங்கும். மருந்தகங்கள், உணவகங்கள் நாள் முழுவதும் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஸ்விக்கி, ஜோமோட்டோ, உபேர் போன்ற நிறுவனங்கள் உணவு விநியோகிக்கவும் நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.