நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விடுதலை சிறுத்தைகளை அநியாயத்துக்கு தி.மு.க. புறக்கணித்துவிட்டதாக குமுறுகின்றனர்
அண்ணாதுரை வடிவமைத்த தி.மு.க. சித்தாந்த ரீதியிலானது. தேர்தல் அரசியலுக்கு அது கைகொடுத்தாலும் கூட, முழு பளுவும் அண்ணா மேல் மட்டும்தான் இருந்தது. அவரை நம்பித்தான் அக்கட்சி சுழல்வது போல் இருந்தது. ஆனால், கருணாநிதி வடிவமைத்து ஸ்டாலின் கையில் கொடுத்திருக்கும் தி.மு.க.வோ ஜனரஞ்சக ரீதியிலானது. கருணாநிதி ஒரு பிறவி அரசியல் சாணக்கியர். அதனால்தான் எல்லா தளங்களிலும் தன் தடத்தை பதித்து, எல்லா வகையான வாக்கு வங்கிகளில் இருந்து தனக்கு ஆதரவு வரும்படி பார்த்துக் கொண்டார்.
சிறுபான்மை காவலர்! என்று புகழப்பட்ட அதே தி.மு.க.வுக்கு, ‘ராமானுஜர்’ எனும் தொடர் எழுதி வைணவர்கள் தரப்பிலிருந்தும் சில வாக்குகள் வரும்படி பார்த்துக் கொண்டார். கருணாநிதி தோள்பிடித்து நடக்கும் தூண்களாக வன்னியர், முத்தரையர், முக்குலத்தோர் போன்றோர் இருந்தாலும் கூட ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த நபர்களுக்கும் முன்னுரிமை வழங்கி தன் தோளோடு நிற்க வைத்தார்.

இது தன் கட்சியில் மட்டுமல்ல, கூட்டணியிலும் தலித்களுக்கு தனி இடம் கொடுத்திருந்தார். அதனால்தான் விடுதலை சிறுத்தைகள் நீண்ட நெடுங்காலமாக தி.மு.க.வுடன் கூட்டணி அரசியலில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இடையில் சின்ன பிளவுகள் நேர்ந்தாலும் கூட மீண்டும் ஓடோடி வந்து இணைந்து கொண்டார் திருமா. ஆனாலும் கருணாநிதி கோலோச்சிய தி.மு.க.வின் மீது கூட்டாளியான விடுதலை சிறுத்தைகள் ‘எங்களை தி.மு.க. நிர்வாகிகள் சாதி ரீதியில் தள்ளி வைக்கிறார்கள்.’ என்று பெரிதாய் குற்றம் சாட்டியதில்லை. அப்படியொரு புகார் ஏதோரு ஒரு செய்திதாளின் மூலம் வந்தாலும், அதிகாலையில் கண்ணகி சிலை அருகே வாக்கிங் போகையிலேயே சம்பந்தப்பட்ட தன் கட்சி நிர்வாகியை அழைத்து சிலம்பை உடைப்பது போல் உடைத்துப் பேசி எச்சரித்துவிடுவார். இதனால் சண்டை சீர் செய்யப்படும். அதனால் தலித் வாக்கு வங்கிகளில் கணிசமான வாக்குகள் தி.மு.க.வை எந்நாளும் ஆதரிப்பதாய் இருந்தன. குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் சார்ந்த தலித் சமுதாய வாக்கு வங்கியும், மேற்கு மண்டலத்தில் அதிக அடர்த்தியுடன் வாழும் அருந்ததியர் வாக்கு வங்கியும்.
கருணாநிதிக்குப் பின்னும் இது சிந்தாமல் சிதறாமல் தி.மு.க.வுக்கு கிடைக்கிறதா? என்றால் பதில் பட்டென ‘ஆம்’ என வரவில்லை இப்போது. விடுதலை சிறுத்தைகள் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் இருந்து தி.மு.க. கூட்டணியில் இருக்கின்றன. ஆனால் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு வரையில் இருந்த நெருக்கமானது, ஆட்சி அமைந்து சில காலமான பின் கொஞ்சம் கொஞ்சமாக சேதாரப்பட்டு இப்போது பெரும் சிக்கலில் போய் நிற்கிறது என்கிறார்கள்.

அதிலும் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விடுதலை சிறுத்தைகளை அநியாயத்துக்கு தி.மு.க. புறக்கணித்துவிட்டதாகவும், சீட் ஒதுக்கிடு விஷயத்தில் மிக மிக அலட்சியப்பட்டுத்தி விட்டதாகவும் சிறுத்தைகள் சீற துவங்கியுள்ளனர். பிரசாரத்துக்கும் அழைப்பதில்லை, தாங்களே போய் நின்றாலும் கண்டுகொள்வதில்லை என்று கொதிக்கிறார்கள். தங்களுக்குள் மட்டுமில்லாமல் வெளிப்படையாகவே சீற துவங்கிவிட்டனர்.
விடுதலைச் சிறுத்தைகளின் மாநில இளைஞரணி துணைத்தலைவரான மாலின் இந்த விவகாரத்தை உடைத்துப் பேசியுள்ளார். “தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசபோன என்னை தி.மு.க. நிர்வாகிகள் கண்டுகொள்ளவே இல்லை. கொஞ்சம் கூட மதிக்கவில்லை. மதுரையில் நாங்கள் எங்கெல்லாம் பலமாக இருக்கிறோம் எனும் வார்டுகளின் லிஸ்ட்டை கொடுத்தும், அதில் ஒன்றை கூட தராமல், எங்களுக்கு வாய்ப்பில்லாத வார்டை ஒப்புக்கு ஒதுக்கியுள்ளனர். அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன், மூர்த்தி ஆகியோர் சாதிப் பாகுபாடு காட்டி அவமானத்திவிட்டனர். என்னை சந்திக்க கூட அவர்களுக்கு மனமில்லை, நேரமும் ஒதுக்கவில்லை.” என்று குமுறி தள்ளியுள்ளார்.
இதைத்தொடர்ந்து மதுரை வி.சி.க. நிர்வாகிகள் “தன்மானம் இல்லா இடத்தில் ஏன் இருக்க வேண்டும். வெளியேறுவோம்! ஸ்டாலின் ஓ.கே.தான் ஆனால் அவருக்கு கீழ் இருக்கும் அத்தனை பேரும் நம்மை அசிங்கப்படுத்துகிறார்கள். தி.மு.க. இன்று ஆளுங்கட்சியாக கோலோச்ச நாமும்தானே காரணம். அதை மறந்து நம்மை சாதி ரீதியாக அசிங்கப்படுத்துவோரை விட்டு வெளியேறுவோம். தலைவா சீக்கிரம் நல்ல முடிவெடு.” என்று திருமாவளவனை நோக்கி குரல் கொடுக்க துவங்கியுள்ளனர்.
ஹும், கஷ்டம்தான்!
