தேர்தல் வரை செலவுகளை எப்படிச் சமாளிப்பது என தெரியவில்லை என்று விசிக தலைவரும் சிதம்பரம் தொகுதி வேட்பாளருமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணி சார்பில் சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் களமிறங்கியிருக்கிறார். சிதம்பரம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு, கட்சித் தொண்டர்கள் தேர்தல் செலவுக்கு நிதி அளிக்கும்படி திருமாவளவன் கோரியிருந்தார். அதன்படி கட்சித் தொண்டர்கள் நிதி வழங்கினர். சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார். இந்நிலையில், தேர்தல்வரை செலவுகளை எப்படிச் சமாளிப்பது எனத் தெரியவில்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி வார இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இதைத் திருமாவளவன் கூறியுள்ளார். அதில், “மிகவும் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்கிறேன். கட்சித் தோழர்கள் நிதி வழங்குகிறார்கள். அதை வைத்துதான் கடந்த 10 நாட்களாகத் தேர்தல் பணியாற்றிவருகிறேன். தேர்தல் வரை செலவுகளை எப்படிச் சமாளிப்பது என்றுகூடத் தெரியவில்லை. நான் நம்புவது மக்களை மட்டும்தான். அதிமுக கூட்டணி எத்தனை கோடிகளைக் கொட்டிக் கொடுத்தாலும் பானை சின்னமே வெற்றி பெறும்.” என்று தெரிவித்துள்ளார்.
தேர்தல் செலவுக்குக்கூட பணம் இல்லாமல் திருமாவளவன் இருப்பதால், விசிக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
