ப.சிதம்பரத்தைப் போல மு.க.ஸ்டாலினும் கைது செய்யப்படுவார் என்ற பாஜகவினரின் ஆசை நிறைவேறாது என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக புதுக்கோட்டைக்கு வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்தார். “தெலங்கானா மாநில ஆளுநராகப் பதவியேற்ற தமிழிசைக்கு என்னுடைய வாழ்த்துக்கள். தமிழிசை தீவிர அரசியலில் இருந்த நிலையில் அவருக்கு ஓய்வு கொடுக்கும் விதமாக ஆளுநர் பதவியை பாஜக தலைமை வழங்கியிருக்கிறது. இது ஏன் என்றே தெரியவில்லை. எப்போதும் துடிப்புடன் செயல்பட்டுவந்த தமிழிசை அரசியலில் தொடர்ந்து செயல்படும்வகையில் மத்திய அமைச்சர் பதவியை வழங்கி இருக்கலாம்.
தமிழக முதல்வர் வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிவர உள்ளார். வெளிநாட்டில் கிடைத்த தொழிலில் முதலீடு குறித்து அவர் அளிக்கும் அறிக்கையை பொறுத்தே எதையும் விமர்சிக்க முடியும். ப.சிதம்பரத்தைப் போல மு.க.ஸ்டாலினும் கைது செய்யப்படுவார் என்று பாஜகவினர் பேசுவது அவர்களுடைய ஆசையாக இருக்கலாம். ஆனால், அந்த ஆசை கண்டிப்பாக நிறைவேறாது. இஸ்ரோ விஞ்ஞானிகள் படைத்திருப்பது மிகப்பெரிய சாதனை.
 சந்திராயன்-2 பின்னடைவு சந்தித்தற்காக கலங்க தேவையில்லை. தொடர்ந்து முயற்சிகளை விஞ்ஞானிகள் மேற்கொள்ள வேண்டும். கேந்திரிய வித்யாலயா பள்ளித் தேர்வு ஒன்றில் சர்ச்சைக்குரிய கேள்வியை கேட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கல்வி காவிமயமாவதையே இச்சம்பவம் காட்டுகிறது. இதுபோன்ற கேள்வி தாள் தயாரிப்பில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தொல். திருமாவளவன் தெரிவித்தார்.