கொலை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்களில் தண்டிக்கப்பட்டவர்களை விடுவிக்கக்கூடாது என மாநில அரசுகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார்.

 
மேலவளவு ஊராட்சி மன்ற தலைவராக இருந்த பட்டியலினத்தைச் சேர்ந்த முருகேசன் உள்பட 7 பேர் கடந்த 1997-ம் ஆண்டு ஆதிக்க சக்திகளால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய 17 பேருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை அளித்தது. அதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இந்த வழக்கில் தண்டனை அனுபவித்து வந்தவர்களில் 3 பேர் 2008-ம் ஆண்டில் அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி விடுவிக்கப்பட்டனர். 14 பேரில் ஒருவர் உயிரிழந்தார். எஞ்சிய மற்ற 13 பேரும் சிறை தண்டனை அனுபவித்து வந்தனர்.

 இந்நிலையில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு பத்தாண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்ததது. இதில் மேலவளவு வழக்கு குற்றவாளிகள் 13 பேரும் முன்கூட்டியே செய்யப்பட்டனர். இந்த விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது. மேலவளவு படுகொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவருவோரை விடுதலை செய்தது சட்டவிரோதமானது என அறிவிக்கக்கோரி நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு விசிக தலைவரும் சிதம்பரம் தொகுதி எம்.பி.யுமான திருமாவளவன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “மாநில அரசுகள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் தண்டிக்கப்பட்டவர்களை ‘மன்னிப்பு(#Remission) வழங்கும் அதிகாரத்தைத்" தவறாகப் பயன்படுத்தி கொலை மற்றும் பாலியல் வல்லுறவு போன்றவற்றில் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளை விடுதலை செய்து வருகின்றன. தமிழ் நாட்டிலும் மேலவளவுப்படுகொலை குற்றவாளிகளை- ஆயுள் தண்டனைக் கைதிகளை (13 பேர்) மன்னித்து விடுவித்துள்ளனர்.


தலித்துகளுக்கு/ பழங்குடிகளுக்கு எதிரான கொடுங்குற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில், மாநில அரசுகள் இவ்வாறு செயல்படுவது பாதிக்கப்படும் தலித்துகளுக்கு/ பழங்குடிகளுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். எனவே, மைய அரசு #MURDER, #RAPE போன்ற குற்றங்களில் தண்டிக்கப்பட்டவர்களை விடுவிக்கக்கூடாது என மாநில அரசுகளுக்கு அறிவுறுத்த வேண்டும்” என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.