இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை மாநகரை சார்ந்த மாணவி ஜோதி துர்கா நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த நிலையில் திடுமென தன்னைத்தானே மாய்த்துக்கொண்டார் என்ற தகவல் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
மாணவச் செல்வங்கள் மருத்துவராக வேண்டும் என்று ஆசைப்படுவது தவறு இல்லை. ஆனால், அதற்காக மன அழுத்தத்திற்கு ஆளாகி, தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு நிலைகுலைந்து போவது வேதனையளிக்கிறது. கொங்கு மாவட்டத்தைச் சார்ந்த சுபஸ்ரீ, அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த விக்னேஷ், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த ஹரிஷ்மா ஸ்ரீ, இன்றைக்கு மதுரை மாநகரைச் சார்ந்த ஜோதிகா துர்கா ஆகிய மாணவர்கள் தன்னைத்தானே மாய்த்துக்கொண்டுள்ளனர்.


நீட் தேர்வின் கொடுமைக்கு ஒரு தீர்வே இல்லையா? நாட்டை ஆளுவோருக்கு நெஞ்சில் ஈரமே இல்லையா? மோடி அரசே நீட் தேர்வை முற்றாகக் கைவிடு, கல்வி தொடர்பான முடிவுகளை மாநில அரசுகளே எடுக்கட்டும், தேசியக் கல்விக் கொள்கையைகூட மோடி அரசு கைவிட வேண்டும். கல்வி தொடர்பான அனைத்து அதிகாரங்களையும் மாநில அரசுகளுக்கான அதிகார வரிசையில் மாநிலப் பட்டியலில் இணைக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன். மாணவச் செல்வங்கள் தற்கொலை செய்து கொள்ளும் இத்தகைய போக்குகளை முற்றாகக் கைவிட வேண்டும்.
கல்வித் தகுதியை மேம்படுத்திக் கொள்வதற்கு ஆளுமையை பெருக்கிக் கொள்வதற்கு வளத்தோடும் நலத்தோடும் வாழ்வதற்கு வழி வகைகள் ஏராளம் உள்ளன வாய்ப்புகள் ஏராளம் உள்ளன. எனவே, மருத்துவராக வேண்டும் என்ற மாயையிலிருந்து விடுபட வேண்டும். வாழ்க்கையில் துணிந்து போராடக் கற்றுக்கொள்ள வேண்டும். மருத்துவராக வேண்டும் என்ற மாயையிலிருந்து விடுபட வேண்டும் என்று மாணவச் செல்வங்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். பிள்ளைகளின் மீது தங்களின் ஆசைகளை திணிக்கிற முயற்சிகளை பெற்றோர்களும் கைவிட வேண்டும். மாணவர்களை சுதந்திரமாகக் கல்வி கற்க அனுமதிக்க வேண்டும் என்று பெற்றோர்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.
தமிழக அரசே ஜோதி துர்கா குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குங்கள் அந்த குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்குங்கள் நீட் தேர்வை முற்றாகக் கைவிடுங்கள்.” என்று அறிக்கையில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.