கால்நூற்றாண்டாய் எனக்காக வாழ்ந்த அக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு நெஞ்சை நெருப்பாய் சுடுகிறது என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது உடன்பிறந்த தமக்கை கு.பானுமதி என்கிற வான்மதி எனக்கு 'அக்கா என்னும் அம்மா ' ! அவர் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தனக்காக வாழாமல் எனக்காக வாழ்ந்தவர். கடந்த 10.07.2020 அன்று அவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால் 17-07-2020 அன்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனின்றி இன்று(05-07-2020) காலை10.25 மணியளவில் காலமாகிவிட்டார்.

மீண்டு வந்துவிடுவார் என்று வலுவான நம்பிக்கையுடன் இருந்தேன். கடந்த ஜூலை 22ம் நாள் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையின் அறைக்குள் நேரில் சென்று பார்த்தேன். என்னைக் கண்டதும் அவர் பற்றி துடித்தார். "நீ ஏன் இங்க வந்த ? நீ பத்திரமாயிரு சாமி" என்று கையெடுத்துக் கும்பிட்டு "வெளியே போ வெளியே போ" என கதறினார். "எனக்கு சாவறத பத்தி பயமில்ல; ஒன்ன அம்போனு விட்டுட்டுப் போறேன; உன்னை யார் சாமி பாத்துக்குவாங்க? அதான் எனக்கு பெரிய கவலையா இருக்கு; ஒன்ன நம்பி சனங்க இருக்காங்க; நீ பத்திரமா இரு; ரூம விட்டு ஒடனே வெளிய போ " என்று அக்கா அலறி துடித்தார். அதனால், அவருக்கு இருமல் கடுமையாகி, மூச்சுத்திணறல் ஏற்பட, நான் பதறிப்போய் அவரை அமைதிப்படுத்த முயன்றேன்.
நான் உடனிருக்கிறேன் என்பதை அறிந்தால் அவருக்குத் தெம்பாக இருக்குமென்று நம்பிதான் உள்ளே சென்றேன். ஆனால்,அவர் என்னைக் கண்டதும் எனக்கு ஏதும் ஆகிவிடக்கூடாதே என பதைபதைத்துப் போனார். இரண்டே நிமிடங்களில் நான் வெளியேறிவிட்டேன். பின்னர் அவர் ஆக்சிஜன் உதவியுடன் அமைதியான சுவாசத்துக்குத் திரும்பினார். தொடர்ந்து ஆக்சிஜன் பெற்றவாறே சிகிச்சையிலிருந்தார். மருத்துவர்களும் நம்பிக்கையளித்தனர். மீண்டு வந்துவிடுவார் என்று நம்பியிருந்தேன்.

