மநுஸ்மிருதி நூலில் பெண்களைப் பற்றி கூறப்பட்டுள்ளதைப் பற்றி விளக்க 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் கருத்து பரப்பி இயக்கம் துண்டுபிரசுரங்களை விடுதலைச் சிறுத்தைகள் வழங்க உள்ளனர். இந்த இயக்கத்தை ஆவடியில் இன்று விசிக தலைவர் திருமாவளவன் தொடங்கிவைத்தார். பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் பாஜக நடத்த உள்ள வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும்.  அப்படி தமிழக அரசு செய்யவில்லை என்றால் அதிமுக அரசை மக்கள் தூக்கி எறிவார்கள்.


பாஜகவினர் நடத்தும் வேல் யாத்திரை என்பது ஓர் அரசியல் நாடகம் ஆகும். வன்முறையைத் தூண்டுவதற்கு அந்த யாத்திரை வழிவகுக்கும். மநுதர்ம நூலை பற்றி நான் பேசுவதற்கு நான் மட்டுமே பொறுப்பு. இதில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை. கமலஹாசன் கழகங்கள் உடன் கூட்டணி இல்லை என அறிவித்ததை வரவேற்கிறேன்” என்று திருமாவளவன் தெரிவித்தார்.