மருத்துவர்களைக் காப்பதற்கு அவசர சட்டம் இயற்றப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளதற்கு  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.  மருத்துவர்களையும் மருத்துவப் பணியாளர்களையும் பாதுகாப்பதற்கு மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என வலியுறுத்தி இன்று மெழுகுவர்த்தி ஏற்றி கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்போவதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்திருந்தது. அதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆதரவு தெரிவித்து இருந்தோம். தற்போது மத்திய அமைச்சரவை அத்தகைய அவசர சட்டம் ஒன்றை இயற்றுவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதை ஏற்று இந்திய மருத்துவர் சங்கமும் தனது கவனயீர்ப்புப் போராட்டத்தை விலக்கிக் கொண்டுள்ளது. 

மருத்துவர்களின் பாதுகாப்புக்காக அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்துள்ள மத்திய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த அவசர சட்டத்தில் சுகாதார பணியில் ஈடுபட்டிருக்கும் துப்புரவுப் பணியாளர்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். கொரோனா தடுப்புப் பணியின்போது உயிரிழக்கும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்தி வந்தோம். தற்போது 50  இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் இறந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். 

இந்த அறிவிப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனமார பாராட்டி வரவேற்கிறோம். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் பயிற்சி மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியாளர்களையும்  இதில் உள்ளடக்க வேண்டுமென்றும் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.அவசர சட்டம் இயற்றப்படும் என்ற மத்திய அரசின் அறிவித்துள்ள நிலையில்,  இன்று இரவு நடத்துவதாக இருந்த ' மெழுகுவர்த்தி ஏற்றும் கவனயீர்ப்புப் போராட்டத்தை '   விடுதலைச் சிறுத்தைகளும் கைவிடுகிறோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.