திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான  தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில்  இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் காண்-ஒலிக் கூடல் (Video Conferencing) வழியாக நடைபெற்றது.  இக்கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் பங்கேற்றார்.  அக்கூட்டத்தில் திருமாவளவன் அவர்கள் 
"கொரோனா தொற்று ஒரு குறிப்பிட்ட சமயத்தவரால்தான் பரவியது என்ற பிரச்சாரத்தை சிலர் முன்னெடுத்து வெறுப்பு அரசியலை மேற்கொண்டனர்.  நோய்த்தொற்று தொடர்பாக அரசு ஒவ்வொரு நாளும் வெளியிட்ட அறிவிப்புகளின்போது ஒரு குறிப்பிட்ட நிகழ்வை முதன்மைப்படுத்திக் கூறியதே அதற்குக் காரணமாகிவிட்டது.  


தற்போது அப்படி குறிப்பிடுவதை அரசு கைவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும் இந்தப் பேரிடர் காலத்திலும் வெறுப்பை உமிழ்வோர்மீது நடவடிக்கை எடுக்காதது மட்டுமின்றி அத்தகைய அமைப்பு ஒன்றை சென்னை மாநகராட்சி தனது நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தியதும் அதிர்ச்சி அளிக்கிறது.  இந்தப் போக்கை தமிழக அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்.  கொரோனா தடுப்பு சிகிச்சை அளித்த மருத்துவர் ஒருவர் நோய்த்தொற்றில் உயிரிழந்தபோது அவரது உடலைத் தகனம் செய்ய அனுமதிக்காமல் பொதுமக்கள் தடுத்த செய்தி வேதனை அளிக்கிறது. மாந்த நேயத்தை வெளிப்படுத்தவேண்டிய இந்தத் தருணத்தில் வெறுப்பைக் காட்டும் இந்தச் செயல் செய்நன்றி மறவா தமிழ்ப் பண்பாட்டுக்கே புறம்பானதாகும்.  எனவே தமிழக மக்கள் எவ்விதத்திலும் வெறுப்புக்கு இடங்கொடாமல் மாந்தநேயத்தை உயர்த்திப் பிடிக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்.  1. நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் 50 நாட்களுக்கு தொடர்ந்து வேலை அளிக்கப்படவேண்டும்  30 நாட்களுக்கான ஊதியம் முன்பணமாக அளிக்கப்பட வேண்டும்  2. பயிற்சி மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதோடு அவர்களும் காப்பீட்டு திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட வேண்டும்  3. ஒரு குடும்பத்தில் கணவனும் மனைவியும் அரசு மருத்துவர்கள் ஆக இருந்தால் யாரேனும் ஒருவருக்கு பணியில் இருந்து விலக்கு அளித்து குடும்பத்தை பார்ப்பதற்கு வகை செய்யப்பட வேண்டும்4. மாவட்ட வாரியாக எத்தனை பேருக்கு பரிசோதனைகள் செய்யப்படுகின்றன அதில் எத்தனை பேருக்கு முடிவு வந்திருக்கிறது எவ்வளவு முடிவுகள் வர வேண்டியிருக்கிறது என்பதை வெளிப்படையாக ஒவ்வொரு நாளும் அரசு அறிவிக்க வேண்டும் . 

 

5. புதிது புதிதாக நிர்வாக அடுக்குகளை உருவாக்குவது பணிகளில் தாமதம் ஏற்பட வழிவகுக்கிறது எனவே தலைமைச் செயலாளர் மாவட்ட ஆட்சியர்கள் நேரடியாகத் தொடர்புகொண்டு மாவட்ட அளவில் எதையும் தீர்மானிக்கும் அளவில் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் புதிய நிர்வாக அடுக்குகள் விலக்கப்பட வேண்டும்  6. மகராஷ்டிர மாநிலத்தில் சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அம்மாநில அரசு சரியாக உதவுவதில்லை.  அதை சீர்செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்  8. தமிழ்நாட்டிலுள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கான நிவாரணம் போதாது. அதை 30 கிலோ அரிசி, 2 கிலோ பருப்பு, 2 கிலோ எண்ணெய் , அரசு வழங்கும் மளிகை பொருட்களின் பொதி ஆகியவற்றை வழங்கவேண்டும் 9. தமிழக மக்களுக்கு வழங்கப்படும் அனைத்து நிவாரண உதவிகளையும் முகாம்களில் உள்ள ஈழத் தமிழர்களுக்கும் விரிவுப்படுத்த வேண்டும்" என கருத்துக்களை வலியுறுத்தி பேசினார். என அக்கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.