மனுஸ்மிருதியை எதிர்க்கும் விடுதலை சிறுத்தைகளால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு நெருக்கடி என்றால், அக்கட்சி தலைவர்களின் அனுமதியுடன் கூட்டணியில் இருந்து வெளியேறவும் விடுதலை சிறுத்தைகள் தயங்க மாட்டோம் என அக்கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  

மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு அனுமதி அளிக்காமல் காலம் தாழ்த்தி வரும் தமிழக ஆளுநரை கண்டித்து  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், புதுச்சேரியில் ஆர்பாட்டம் நடைபெற்றது. அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: 

விடுதலை சிறுத்தைகள் மனுஸ்மிருதியை விமர்சித்ததற்காக, திருமாவளவன் பெண்களை பற்றி அவதூறாக பேசிவிட்டார் என தமிழக பாஜக மற்றும் காவி கும்பல் எனக்கெதிராகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எதிராகவும் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். நான் சொல்கிறேன், ஒருபோதும் தமிழகத்தில் பாஜகவின் ஜம்பம் பலிக்காது. பாஜகவை நாங்கள் மூர்க்கமாக எதிர்ப்போம், எதைப்பற்றியும் நாங்கள் கவலைப்பட மாட்டோம். ஒருவேளை என்னால் திமுகவுக்கோ,காங்கிரசுக்கோ, மதிமுகவுக்கோ இல்லை தோழமைக் கட்சிகளுக்கோ அரசியல் நெருக்கடி ஏற்படுமானால் அந்த அணியில் உள்ள தலைவர்களின் ஒப்புதலோடு கூட்டணியில் இருந்து வெளியேறி பாஜகவை தீவிரமாக எதிர்க்கவும் திருமாவளவன் தயங்க மாட்டான். 

கொண்ட கொள்கையில் இருந்து ஒருபோதும்  பின்வாங்காமல் பாஜகவை எதிர்த்து போராடுவான். விசிகவா..? இல்லை பாஜகாவா..?
ஒருக்கை பார்ப்போம். நான் அம்பேத்கரின் பிள்ளை, பெரியாரின் மாணவன், விடுதலை சிறுத்தைகளுக்கு சீட் கிடைக்காவிட்டால் பரவாயில்லை, தேரதல் அரசியல் விடுதலை சிறுத்தைகளுக்கு ஒரு பொருட்டல்ல,  சமூக மாற்றத்தையே நாங்கள் முதன்மையாக விரும்புகிறோம். தேர்தலை இரண்டாவது பட்சமாக தான் விரும்புகிறோம். என ஆக்ரோஷமாக திட்டவட்டமாக பேசினார்.  அவரது பேச்சுக்கு அங்கு திரண்டிருந்த விடுதலை சிறுத்தைகள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.