தி.மு.க கூட்டணியில் சிதம்பரம் தொகுதிக்கு வாக்குறுதி கொடுக்காத காரணத்தினால் கடந்த மூன்று மாதங்களாகவே அவ்வப்போது தி.மு.கவிற்கு திருமாவளவன் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வந்தார். சிதம்பரம் தொகுதியில் தான் போட்டியிடுவது உறுதி என்று திருமாவளவன் கூறியது உண்மையிலேயே தி.மு.கவினரை கடுப்பாக்கியது. அதன் பிறகு எடப்பாடி பழனிசாமியை சந்திக்க நேரம் கேட்டது தி.மு.க உயர்மட்ட நிர்வாகிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இதன் உச்சகட்டமாக புயல் நிவாரணப் பணிகளை விமர்சித்து ஸ்டாலின் அரசியல் செய்து வந்த நிலையில் தமிழக அரசை வெளிப்படையாக பாராட்டி திருமாவளவன் பேட்டி கொடுத்தார். மேலும் டி.டி. வி தினகரனையும் திடீரென சந்தித்து அரசியல் அரங்கில் புதிய பரபரப்பை ஏற்படுத்தினார் திருமாவளவன். இந்த அனைத்து நடவடிக்கைகளுமே கூட்டணி விவகாரத்தில் தி.மு.கவை இறங்கி வர வைப்பதற்கான யுக்தி என்று திருமா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அறிவாலயத்தில் இருந்து திடீரென திருமாவிற்கு அழைப்பு வந்துள்ளது. தனது யுக்தி வென்றுவிட்டதாக திருமாவும் மகிழ்ச்சியுடன் ஸ்டாலினை சந்திக்க சென்றுள்ளார். அப்போது கூட்டணி விவகாரம் குறித்து அமைதியாக இருக்கும்படியும், விரைவில் நல்ல செய்தி சொல்வதாகவும் மட்டும் கூறி திருமாவை அனுப்பி வைத்துள்ளார் ஸ்டாலின். இதனால் தான் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், தி.மு.க – வி.சி.க இடையிலான உறவு பலமாக உள்ளதாக கூறினார்.

அப்போதும் கூட இரண்டு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி உருவாகிவிட்டதாக திருமா தெரிவிக்கவில்லை. இதனால் வெற்றிக் களிப்புடன் சென்ற திருமாவிற்கு ஸ்டாலின் தரப்பில் இருந்து ஏமாற்றமே பரிசாக கொடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.