Asianet News TamilAsianet News Tamil

ஒரே தேசம் ஒரே இந்தியாவுக்கு எதிராக தமிழ் கொடி கேட்கும் திருமாவளவன்..!! எடப்பாடியை துணைக்கு அழைக்கும் அதிரடி அரசியல்..!!

இத்தகைய கொண்டாட்டம் வெற்று ஆரவாரமாக அமைந்துவிடாமல், நமது மொழியையும் இனத்தையும் நிலத்தையும் மேம்படுத்துவதற்கு ஏதுவாக, சாதி, மத பிரிவினைவாதங்களிலிருந்து மீண்டெழும் தமிழ்த்தேசியத்தை வளர்த்தெடுக்கும் வகையில் இதனை முன்னெடுக்க சனநாயக சக்திகள் அனைவரும் உறுதியேற்போம். தமிழ்நாடு நாள் கொண்டாடும் இந்தவேளையில், தமிழ்நாட்டுக்கென தனியே ‘மாநிலக்கொடி’ ஒன்றை உருவாக்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். 

vck leader thirumavalavan ask to develop individual flag for tamilnadu as like karnataka
Author
Chennai, First Published Nov 1, 2019, 3:25 PM IST

இனி ஆண்டுதோறும் நவம்பர் முதல்நாள், ‘தமிழ்நாடு நாள்’ என கொண்டாட தமிழ்நாடு அரசு முன்வந்திருப்பது பெருமகிழ்ச்சியை அளிக்கிறது. அண்டைமாநிலங்கள் ஏற்கனவே இந்நாளை அரசுவிழாவாகக் கொண்டாடி வருகின்றன என்பதை நாம் அறிவோம். கர்நாடகாவில் அம்மாநிலத்துக்கென தனிக்கொடியையும் பயன்படுத்துகின்றனர். மொழிவாரி மாநிலக்கோரிக்கையை 1930களிலிருந்தே முன்வைத்துப் போராடிய தமிழ்நாடு, மிகவும் காலம்தாழ்ந்து இந்த நிலைப்பாட்டுக்கு வந்துள்ளது. எனினும், இதனை மகிழ்ச்சியுடன் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்பதுடன் தமிழக அரசுக்குப் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். 

vck leader thirumavalavan ask to develop individual flag for tamilnadu as like karnataka

ஆங்கிலேயர் ஆதிக்கத்திலிருந்து இந்தியா விடுதலை அடைந்த காலத்தில், இது மூன்று வகையான ஆட்சிநிர்வாகங்களைக் கொண்ட வெவ்வேறு பகுதிகளாக இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சிநிர்வாகப் பகுதிகள், பிரெஞ்சு-போர்ச்சுகீசிய ஆட்சிநிர்வாகப் பகுதிகள், மற்றும் இவற்றுக்குட்படாத தனித்தனியாக மன்னர்கள் ஆண்ட சமஸ்தான ஆட்சிநிர்வாகப்பகுதிகள் என இந்தியா சிதறிக்கிடந்தது. 1947க்குப் பிறகுதான் ஒரே இந்தியாவாக உருவாக்கம் பெற்றது. அதன்பின்னர் மொழிவாரி மாநில கோரிக்கைகள் எழத்தொடங்கின. 

அதனைத்தொடர்ந்து,1948இல் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். கே தார் அவர்களின் தலைமையில் மறுசீரமைப்பு ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் மொழிவாரி மாநிலப் பிரிவினைக்கு  உடன்படவில்லை. ஆனாலும், நிர்வாகம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலங்களைப் பிரிக்கப் பரிந்துரைத்தது. அதே காலகட்டத்தில் பண்டிட் ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லப்பாய் படேல் மற்றும் பட்டாபிசீதாராமையா ஆகியோரைக்கொண்ட குழுவும் இது குறித்து தீவிர கலந்தாய்வில் ஈடுபட்டது. இக்குழுவும் மொழிவாரிமாநில கோரிக்கையை ஏற்கவில்லை. எனினும், முதன்முதலாக, 1953இல் மொழிவாரி அடிப்படையில் மதறாஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரப்பிரதேசம் பிரிந்தது. பொட்டிஶ்ரீராமுலு அதற்கென உண்ணாநிலையிருந்து உயிரிழந்ததையடுத்து இப்பிரிவினை மேற்கொள்ளப்பட்டது.  

அதே காலகட்டத்தில், 1953இல் நீதியரசர் ஃபசல் அலி அவர்களின் தலைமையில் உருவாக்கப்பட்ட மறுசீரமைப்புக் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் ‘மறுசீரமைப்புச் சட்டம்-1956’ உருவாக்கப்பட்டது. இதனடிப்படையில் தான், இன்றுள்ளவாறு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. ‘மதறாஸ் ப்ராவின்ஸ் ’ என இருந்த பிரிட்டிஷ் இந்தியப் பகுதியிலிருந்து சில பகுதிகள் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களோடு இணைக்கப்பட்டநிலையில் எஞ்சிய பகுதியே,  ‘மதறாஸ் ஸ்டேட்’ என்னும் பெயரில் தமிழ் மாநிலம் பிரிக்கப்பட்டது.  இந்நிலையில், தமிழர் நிலத்துக்குத் தமிழ்நாடு என பெயர்சூட்ட வேண்டுமென காங்கிரஸ் இயக்கத்தைச்சார்ந்த ‘தியாகி சங்கரலிங்கனார்’ அவர்கள் தொடர்ந்து உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு அக்டோபர் 13, 1956 இல் உயிர்நீத்தார். தமிழகத்தில் அன்று காங்கிரஸ் கட்சியே ஆட்சியிலிருந்தாலும் உண்ணாநிலையிலிருந்த தியாகி சங்கரலிங்கனாரைக் காப்பாற்றவில்லை என்பது வேதனைக்குரியதாகும். அவரது கோரிக்கையும் அவரது ஈகமும் புறந்தள்ளப்பட்டது. 

vck leader thirumavalavan ask to develop individual flag for tamilnadu as like karnataka

இதே கோரிக்கையை அன்று திமுக தீவிரமாக ஆதரித்தது. பின்னர், திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் ‘1969 சனவரி 15’ அன்று தமிழ்நாடு என தமிழர் நிலத்துக்குப் பெயரசூட்டப்பட்டது. இந்நிலையில், ‘சனவரி15’ அன்று ‘தமிழ்நாடு நாள்’ என கொண்டாடுவதுதான் பொருத்தமானதாக இருக்கும். ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாடும் இந்நன்னாளில், சங்கரலிங்கனாரின் ஈகத்தையும் பேரறிஞர் அண்ணா மற்றும் திமுகவின் பங்களிப்பையும், தமிழ்நாடு மீட்புக்களத்தில் தீவிரமாகப் பணியாற்றிய மபொசி அவர்களின் பங்களிப்பையும் நினைவுக்கூர்வது ஒவ்வொரு தமிழனின் நன்றிக்கடன் ஆகும்.

இத்தகைய கொண்டாட்டம் வெற்று ஆரவாரமாக அமைந்துவிடாமல், நமது மொழியையும் இனத்தையும் நிலத்தையும் மேம்படுத்துவதற்கு ஏதுவாக, சாதி, மத பிரிவினைவாதங்களிலிருந்து மீண்டெழும் தமிழ்த்தேசியத்தை வளர்த்தெடுக்கும் வகையில் இதனை முன்னெடுக்க சனநாயக சக்திகள் அனைவரும் உறுதியேற்போம்.  தமிழ்நாடு நாள் கொண்டாடும் இந்தவேளையில், தமிழ்நாட்டுக்கென தனியே ‘மாநிலக்கொடி’ ஒன்றை உருவாக்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். என தொல். திருமாவளவன் தனது அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios