அண்ணல் அம்பேத்கரை பாரதிய ஜனதா கட்சி கொண்டாடியே வருகிறது. இத்தனைக்கும் பாஜகவின் இந்துத்துவா சித்தாந்தத்தின் கடும் எதிரியாக திகழ்ந்தவர் அம்பேத்கர்

அண்மைக்காலமாக அண்ணல் அம்பேத்கரை பாரதிய ஜனதா கட்சி கொண்டாடியே வருகிறது. இத்தனைக்கும் பாஜகவின் இந்துத்துவா சித்தாந்தத்தின் கடும் எதிரியாக திகழ்ந்தவர் அம்பேத்கர். ஆனாலும் அம்பேத்கர் கனவை நிறைவேற்றுகிறோம் என்கிறது பாஜக. அம்பேத்கரின் பெயரை பாஜக அபரிக்க முற்படுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பாஜக சித்தாந்தங்களை எதிர்த்து வருகிறது வி.சி.க. 

பாஜகவை மதவாத கட்சி என்றும், இந்தியாவை பிரித்தாளும் கட்சி என்றும்​ இவர்கள் படைக்க இருக்கிற பார்ப்பன தேசத்திற்கு அல்லது இந்து தேசத்திற்கு, ராமராஜ்யத்திற்கு எதிராக எங்கெல்லாம், எதுவெல்லாம் தடையாக இருக்கிறது என்று பார்க்கிறார்கள். குறிப்பாக அவர்களுக்கு தடையாக இருப்பது தேசிய இனங்களின் விடுதலை அல்லது தேசிய இனங்களிடையே உரிமை. தேசிய இனங்களின் அடையாளத்தை நீர்த்துப்போகச் செய்ய வேண்டிய வேலைகளை கொஞ்சம் கொஞ்சமாக செய்து வருகிறார்கள் என்று குற்றம்சாட்டுகிறது விசிக.

டாக்டர் அம்பேத்கர் அவர்கள் சொன்னார்கள் சிறுபான்மை மக்களின் உரிமை, உடமை நசுக்கப்படும் என்றால் இந்தியாவிற்குள் உள்நாட்டுப் போர் வெடிக்கும் என்று சொன்னார்கள். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மோடி அவர்களே, உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களே, புரட்சித் தலைவர் அம்பேத்கர் அவர்களின் கருத்தை மீண்டும் நாங்கள் இங்கே அழுத்தமாகச் சொல்கிறோம் என பாஜகவுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகிறது விசிக.

இது குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கூறுகையில், ‘’​இந்தியா முழுவதும் மோடி எதிர்ப்பு தொடரும் என பல தலைவர்களும் கூறி வருகின்றனர். இதை சொன்னது விடுதலை சிறுத்தைகள். தேர்தலில் 1 சதவிகிதம் கூட வாக்குகளை பெற முடியாத ஒரு கட்சி. கூட்டணி, பாமக எதிர்ப்பை வைத்து ஓரிரு இடங்களில் வெற்றி பெறுகிற ஒரு கட்சி. அவங்க கிறிஸ்தவ, முஸ்லீம் ஓட்டுக்காக பேசிக்கிட்டு இருப்பாங்களே தவிர அவங்க எதிர்ப்பெல்லாம் பெரிய விஷயமே இல்லை’’ என ரவீந்திரன் துரைசாமி விமர்சித்துள்ளார்.