பாஜகவின் சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டால் தான் நாட்டை காப்பாற்ற முடியும் என திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.

இன்று பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்ட அவர் இதுகுறித்து பேசுகையில், ‘’அடிப்படை உறுப்பினரிலிருந்து விலகிக்கொள்கிறேன் என நானே ஸ்டாலின் கடிதம் எழுதினேன். அதுதான் மரியாதை. திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருப்பவர்கள் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டதன் நோக்கத்திலிருந்து பிறழும்போது, நான் வேறு இடத்திற்கு செல்வதில் என்ன இருக்கிறது?
 
என்னிடம் விளக்கம் கேட்கப்படாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது சம்பந்தமாக அவர்களிடம் நான் எதுவும் கேட்க விரும்பவில்லை. சண்டை போட விரும்பவில்லை. சட்ட ரீதியான நடவடிக்கைகளைக் கேட்க விரும்பவில்லை. அவர்களுடைய கட்சி அது. அவர்களுக்கு எல்லா அதிகாரங்களும் இருக்கிறது. எல்லா அதிகாரங்களையும் கருணாநிதி, க.அன்பழகன் உயிருடன் இருக்கும்போதே ஸ்டாலின் எடுத்துக்கொண்டார். அதற்கு உள்ளே நான் போக விரும்பவில்லை. என்னுடைய பாதை இனிமேல் வேறு. நல்ல இடத்திற்கு சென்று சேர வேண்டும் என்பது என் எண்ணம்.

திமுகவில் சாதி பாகுபாடு நன்றாக பார்க்கிறார்கள். அங்கு சாதிக்கு ஒரு நீதி. திமுகவிற்காக கடுமையாக உழைத்தவன். திமுக தோன்றிய கொள்கையில் இருந்து பிரிந்து செல்கிறது. திமுகவில் சாதி வேறுபாட்டை உரம் போட்டு வளர்க்கின்றனர். அறிஞர் அண்ணாவோ, தந்தை பெரியாரோ இன்று உயிருடன் இருந்திருந்தால் தம்பி முருகனுக்கு பா.ஜ.க தலைவர் பதவி கொடுத்ததற்காக அவரை இல்லம் தேடி வந்து வாழ்த்தி இருப்பார்கள். பாஜகவின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டால்தான் இந்தியாவை காப்பாற்ற முடியும்’’என அவர் தெரிவித்துள்ளார்.